விவசாயிகள்  மீது மோதிய ஜீப் வீடியோ காங்கிரஸ் வெளியிட்டதால்  பரபரப்பு 

by Editor / 05-10-2021 05:36:23pm
 விவசாயிகள்  மீது மோதிய ஜீப் வீடியோ காங்கிரஸ் வெளியிட்டதால்  பரபரப்பு 

உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அக்டோபர் 3 ஆம் தேதி காரில் சென்று மோதியதால் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதாகவும், . அதையடுத்து ஏற்பட்ட மோதல்களால் இதுவரை ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. சம்பவ இடத்தில் தன் மகன் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் மறுத்துள்ளார். ஆனாலும் முதல் தகவல் அறிக்கையில் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.


கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று (அக்டோபர் 4) அப்பகுதிக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உபி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். விவசாயிகள் மீதான கொலைத் தாக்குதலைக் கண்டித்தும், பிரியங்கா காந்தியின் கைதைக் கண்டித்தும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தான் கைது செய்யப்பட்டதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார், “இது பாஜகவின் நாடல்ல. இது விவசாயிகளின் நாடு.. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க நான் முடிவு செய்து சென்றது குற்றமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் உபி முதல்வருமான அகிலேஷ் யாதவும் லக்னோவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் காங்கிரஸ் போராடிய நிலையில்காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் மீது வாகனம் ஏற்றப்பட்ட கொடூரத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளது.


போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கூட்டத்தின் இடையே அவர்களின் பின் புறத்தில் இருந்து வேகமாக ஒரு ஜீப் மோதிக் கொண்டே போகிறது. அப்போது வெள்ளை சட்ட பச்சை தலைப்பாகை அணிந்த விவசாயி அந்த வாகனத்தின் பென்னட்டின் மீது ஏற்றப்பட்டு தூக்கி வீசப்படுகிறார். நாலாபுறமும் விவசாயிகள் சிதறி ஓடுகிறார்கள். அடுத்த நொடியே இன்னொரு வாகனமும் பின் தொடர்ந்து அதே பாதையில் செல்கிறது. அந்த பதைபதைப்பான நொடிகள் பார்ப்பவர்கள் நெஞ்சை பதறச் செய்கின்றன.

இந்த வீடியோவை வெளியிட்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, “ மனதை உலுக்கும் லக்கிம்பூர் கெரி காட்சிகள். இந்த விவகாரத்தில் மோடி அரசு கடைபிடிக்கும் மௌனமே இதில் அவர்களின் உடந்தையை உறுதிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. 
பிரதமர் மோடி உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவுக்கு வரும் நிலையில் லக்கிம்பூர் கெரி போராட்டங்கள் தீவிரமாகின்றன.

 

Tags :

Share via