லக்கிம்பூரில் 9 பேர் பலி சம்பவம் விவசாயிகள் மீது திட்டமிட்டுத்  தாக்குதல் : ராகுல் காந்தி புகார்

by Editor / 06-10-2021 04:23:07pm
லக்கிம்பூரில் 9 பேர் பலி சம்பவம் விவசாயிகள் மீது திட்டமிட்டுத்  தாக்குதல் : ராகுல் காந்தி புகார்

‘‘லக்னோ நகருக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, விவசாயிகள் தாக்கப்பட்ட லக்கிம்பூர் கெரிக்குச் சென்று விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை’’ என்று குற்றஞ்சாட்டிய ராகுல்காந்தி, ‘‘அங்கு விவசாயிகள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’’ என்றும் காட்டமாகப் புகார் கூறினார்.


முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு சென்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். பிரியங்கா காந்தி கடந்த 28 மணி நேரமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் மீது சிஆர்பிசி 151-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்கிம்பூர் கெரி மாவட்டத்துக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாத வகையில் 144 தடை உத்தரவையும் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.


லக்கிம்பூர் கெரிக்குச் செல்ல  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தயாரானார். ஆனால் விமானத்தில் ஏற அவருக்கும் அவரோடு இருந்த 3 பேருக்கும் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின் அதை அதிகாரிகள் வாபஸ் பெற்றனர். இந்நிலையில் அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூரில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறேன். அங்கிருக்கும் சூழல்களையும் அறிந்து வர இருக்கிறோம். பிரியங்கா காந்தி தற்போது சீதாபூரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.விவசாயிகளின் உரிமைகள் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. லக்னோவுக்கு சென்ற பிரதமர் மோடி லக்கிம்பூர் கெரி பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை.

இது விவசாயிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல். இதனால்தான் விவசாயிகள் போராடுகிறார்கள்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம் இயற்றியதில் தொடங்கி, தற்போது வேளாண் சட்டங்கள்வரை போராட்டம் தொடர்ந்து வருகிறது. எங்களுடைய பணி என்பது எதிர்க்கட்சியாக அழுத்தம் கொடுத்து ஆளும் அரசைச் செயல்படச் செய்வதுதான். இதை நாங்கள் செய்யாவிட்டால், ஹத்ராஸில் கூட ஏதும் நடந்திருக்காது.


விவசாயிகள் ஜீப் ஏற்றித் தள்ளப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர். லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் ஒருவரும், அவரின் மகனும் வந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு.ஆனால், நாங்கள் கேள்வி எழுப்பினால், இந்த விவகாரத்தைப் பேசினால், நாங்கள் அரசியல் செய்கிறோம் என ஊடகங்கள் பேசுகின்றன.


உத்தரப் பிரதேசத்துக்கு அரசியல் தலைவர்கள் செல்ல முடியாதா. நாங்கள் செல்லக்கூடாது என்று கூறிவருகிறார்கள். சத்தீஸ்கர் முதல்வர் லக்கிம்பூர் செல்ல முயன்றபோதும் அனுமதியில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பதை நான் அறிய வேண்டும். அதற்காகத்தான் போகிறோம். சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதெல்லாம் கதை. இந்தக் கதைக்கு ஒரு எல்லை இருக்கிறது.


விரைவிலோ அல்லது அடுத்து வரும் காலங்களிலோ மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்படும். இவ்வாறு செய்யாதீர்கள் என நாங்கள் அவர்களிடம் கூற முயல்கிறோம். ஜனநாயக முறையைப் பராமரிக்க முயல்கிறோம். இந்த தேசத்துக்கு நம்பிக்கையூட்டப் போகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தார், விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கப் போகிறோம்''.இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

Tags :

Share via