மரங்களில் அமர்ந்து கண்காணிப்பு: மயக்க ஊசி  செலுத்தி ஆட்கொல்லி புலி பிடிக்கப்படும் வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் பேட்டி

by Editor / 06-10-2021 04:26:18pm
 மரங்களில் அமர்ந்து கண்காணிப்பு: மயக்க ஊசி  செலுத்தி ஆட்கொல்லி புலி பிடிக்கப்படும் வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் பேட்டி

மரங்களில் ஏறி அமர்ந்து ஆட்கொல்லி புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து, புது உத்திகளைக் கையாண்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதன்மை உயிரின வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உறுதியளித்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர் சோலை அருகே தேவன் பகுதி முதுமலை, ஸ்ரீமதுரை ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதர்களையும் புலி அடித்துக் கொன்றது. இதைத்தொடர்ந்து இந்த ஆட்கொல்லி டி.23 புலியைப் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் புலி சிக்கவில்லை, எங்கு பதுங்கி உள்ளது என்பது தெரியவில்லை.


இந்த நிலையில்  சிங்காரா வனப்பகுதியில் எருமை ஒன்றைப் ஆட்கொல்லி புலி தாக்கி கொன்றது. மேலும் உள்ளூர் வாகன ஓட்டுநர் ஒருவர், அந்தப் புலியை சிங்காரா மின்நிலையம் அருகே பார்த்ததாகக் கூறியதையடுத்து வனத்துறையினர், சிங்காரா பகுதிக்கு விரைந்தனர்.


மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் வேட்டைத் தடுப்புப் பிரிவினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்களில் ஏறி அமர்ந்து புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.


இந்த நிலையில் தமிழ்நாடு முதன்மை உயிரின வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புலியைப் பிடிக்கும் பணி தொடர்ந்து 12வது நாளாக நடைபெற்று வருகிறது. பணியில் ஈடுபடும் வன ஊழியர்கள், புலியின் பாதுகாப்பு உறுதி செய்த பிறகு அதனை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புலி முதிர்ச்சியின் காரணமாகக் கால்நடைகள் மற்றும் மனிதர்களைத் தாக்கி வருகிறது.சென்னை ஐகோர்ட் புலியைச் சுட்டுக்கொல்ல வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.


மரங்களில் ஏறி அமர்ந்து ஆட்கொல்லி புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து, புது உத்திகளைக் கையாண்டு மயக்க ஊசி செலுத்தி புலியைப் பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


வேட்டைத் தடுப்புக் காவலர்களான பழங்குடியினர்கள் ஆலோசனையின்படி புலியைப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலி பிடிபட்டவுடன் கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு 12,500-லிருந்து 15,000 சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மனித வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருவதால், அதனைத் தடுக்கும் வகையில், மக்களை அச்சுறுத்தி இடையூறு செய்யும் வனவிலங்குகளைக் கண்டறிந்து, ரேடியோ காலரிங் மூலம் வன ஊழியர்கள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Tags :

Share via