வங்கக் கடலில் குறைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம் தகவல் 

by Editor / 06-10-2021 05:46:38pm
வங்கக் கடலில் குறைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம் தகவல் 

வரும் 10ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடக்கு அந்தமானுக்கு அருகே வங்கக் கடலில் வரும் 10ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்காக தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடற்கரையை நோக்கி அடுத்த 4 - 5 நாள்களுக்கு நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அடுத்த 96 முதல் 120 மணி நேரத்தில், வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


மேலும், தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யும்.


வேலூர், ராணிப்பேட்டை, கோவை, தேனி, திண்டுக்கல், குமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.


நாளை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via