ஆக்சிஜன் பற்றாக்குறை:  டெல்லியில் 20 பேர் உயிரிழப்பு

by Editor / 24-04-2021 05:27:09pm
ஆக்சிஜன் பற்றாக்குறை:  டெல்லியில் 20 பேர் உயிரிழப்பு


டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 20 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,331 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 348 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டெல்லியில் தற்போது 92,000 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில்,  கொரோனா சிகிச்சை பெற்று வந்த 20 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டி.கே பாலூஜா கூறுகையில் ‘ 3.5 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அரசிடமிருந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்டது.  மாலை 5 மணிக்கு வந்தடைய வேண்டிய ஆக்சிஜன் டேங்கர் நள்ளிரவில்தான் வந்தடைந்தது. ஆக்சிஜன் வந்தடையத் தாமதமானதால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.
இதுபோன்று மோல்சந்த் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மது ஹந்தா கூறுகையில் ‘எங்களிடம் அரை மணி நேரத்திற்கான ஆக்சிஜன் மட்டுமே இருக்கிறது. இதுபோன்று மற்ற மருத்துவமனைகளும் இதே சிக்கலைச் சந்தித்து வருகிறது’ என்று அவர் தெரிவித்தார். 

 

Tags :

Share via