தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலம் தமிழகம்-ஸ்டாலின் பெருமிதம்

by Editor / 10-10-2021 04:15:35pm
தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலம் தமிழகம்-ஸ்டாலின் பெருமிதம்

சென்னை கிண்டியில் ஆங்கில நாளேடு கருத்தரங்கு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் 'மெர்ச்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ்' என்ற வணிக பிரதியை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கடந்த 2008- ஆம் ஆண்டு 'டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழின் சென்னை பதிப்பை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் திராவிட மாடல். அதை நோக்கி தான் எல்லாத் திட்டங்களும் உள்ளன. முதலமைச்சராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறேன்.

மேலும், தி.மு.க. ஆட்சியமைத்த கடந்த 4 மாதங்களில் தமிழ்நாடு தொழிற்துறையில் புத்துணர்வு அடைந்திருக்கிறது. இந்தியாவிலேயே ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். அனைத்து தொழில்களும் தொடங்குவதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது.

தொழில் துவங்க

உகந்த மாநிலம்

தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு. புதிய தொழில்களை தொடங்குவதற்கான உள்கட்டமைப்பை சீர்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம். ஏற்றுமதியில் 3-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டுவர தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் அதிக அளவில் வரவேண்டும். ஏற்றுமதி செய்யும் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

அரசை பாராட்டி எழுத வேண்டும் என்று நான் கட்டளை போடவில்லை, விமர்சனங்கள் செய்யுங்கள், அதனை சரி செய்கிறோம். தமிழ்நாடு தொழிற்துறை குறித்த செய்திகள் அதிகம் இடம் பெற வேண்டும் என்று ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via