கொரோனா தடுப்பூசியை ஊக்கப்படுத்த தேசியக் கொடி நிறத்தில் மாமல்லபுரம் ஐந்து ரதம் ஒளிரும் மின்விளக்குகளால் அலங்கரிப்பு

by Editor / 16-10-2021 04:01:24pm
கொரோனா தடுப்பூசியை ஊக்கப்படுத்த தேசியக் கொடி நிறத்தில் மாமல்லபுரம் ஐந்து ரதம் ஒளிரும் மின்விளக்குகளால் அலங்கரிப்பு



நாடு முழுவதும் 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டதை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய கொடியின் நிறத்தில் மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் ஒளிரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் இதுவரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அந்தந்த மாநில அரசுகள் மூலம் நாடு முழுவதும் இதுவரை 100 கோடி கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது.


மத்திய அரசு நிகழ்த்தியுள்ள இந்த சாதனையை ஊக்கப்படுத்தி, இதனை பிரபலப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 100 புராதன சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒளிரும் மின்விளக்குகளால் இரவு நேரங்களில் மக்களுக்கு காட்சிப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து மாமல்லபுரத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்துரதம் புராதன சின்னம் ஒளிரும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகுற காட்சி அளித்தது. சகாதேவ ரதம், நகுலன் ரதம், பீமரதம், அர்ச்சுணர் ரதம், தர்மராஜர் ரதம் என தனித்தனியாக கல்லில் வடிக்கப்பட்ட ஐந்து ரதங்களும் தேசிய கொடியின் வண்ண கலரில் அழகுற காட்சி அளித்து ஜொலிக்கிறது. அதேபோல் இந்த ஐந்துரத வளாகத்தில் பார்வையாளர்கள் அதிகம் கவரும் யானை, சிங்கம் சிற்பமும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.


சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் ஆகியோர் இந்த ஒளிரும் மின் விளக்கு அலங்கார ஏற்பாடுகளை பார்வையிட்டு அதனை பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தனர்.


சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் கம்பிவேலிக்கு வெளியில் இருந்து ஐந்துரதத்தின் மின் விளக்கு அலங்காரத்தினை பார்த்து, ரசித்துவிட்டு செல்பி, புகைப்படம் எடுத்துவிட்டு செல்கின்றனர். சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மூலம் இந்த விளக்கு அலங்கார காட்சி வைரலாக பரவி வருகிறது.3 நாட்கள் இந்த மின் விளக்கு அலங்காரத்தில் ஐந்துரதம் இரவு 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இருக்கும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via