முத்தாரம்மன் கோயில்திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதி இல்லை – நீதிமன்றம் உத்தரவு

by Staff / 14-09-2022 02:48:04pm
 முத்தாரம்மன் கோயில்திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதி இல்லை – நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திப்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 10 நாட்கள் விமர்சியாக நடைபெறும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் மக்கள் கலந்துக் கொள்வார்கள். இந்நிலையில், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தசரா திருவிழாவில் இரவு நேரங்களில் ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில் சினிமா துணை நடிகைகள், நாடக நடிகைகளை அழைத்து வந்து ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அரை குறை ஆடைகளுடன் நடன நிகழ்ச்சி நடத்துவதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குலசை தசரா விழாவின் போது பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் திருவிழா தொடங்குவது முதல் முடியும் வரை நேரில் சென்று கண்காணித்து, பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒலிபரப்பப் படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர். கோயில் திருவிழாக்களில், ஆபாச நடனங்கள் ஆடவதையும், பாடல்களை இசைப்பதையும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.
 

 

Tags :

Share via