“என் பிரச்சனைய ஒரே போன் கால்ல தீர்த்து வெச்சவர் கலைஞர்” : வடிவேலு நெகிழ்ச்சி

by Editor / 23-10-2021 07:09:04pm
“என் பிரச்சனைய ஒரே போன் கால்ல  தீர்த்து வெச்சவர் கலைஞர்” :  வடிவேலு நெகிழ்ச்சி



‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படம் சிக்கலுக்குள்ளானபோது ஒரே போன் காலில் தீர்த்துவைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்” என வடிவேலு மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளாக மிகச் சொற்ப படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் வடிவேலு, மீண்டும் முழுவீச்சில் படங்களில் நடிக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு.

இந்நிலையில் ‘ஆனந்த விகடன்’ இதழுக்கு பேட்டியளித்துள்ள நடிகர் வடிவேலு, கலைஞர் உடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.


அதில் நடிகர் வடிவேலு, “கலைஞர் நம்மைப் பேசவிட்டு ரசிப்பார். அவ்வளவு சந்தோஷமா இருக்கும். எப்பவும் பேசணும்னு தோணுனா கூப்பிட்டு விடுவார். இந்தியாவே அவர் பேச்சைக் கேட்டு நடக்கிற காலத்துல, நம்ம பேச்சையும், காமெடியையும் ரசிப்பார்.


ஒரு விஷயத்தை இதுவரை எங்கும் சொன்னதே இல்லை. ‘புலிகேசி’ எடுத்து முடிச்சதும் புளூ கிராஸ் பிரச்னை பண்ணிடுச்சு. சர்ட்டிபிகேட் தாமதம் ஆனது. நான் எஸ் பிலிம்ஸ் ஓனரையும், டைரக்டரையும் கூட்டிட்டு கலைஞரைப் பார்க்கப்போனேன்.‘என்னய்யா வடிவேலு இந்தப் பக்கம்’னு கேட்டாரு. ‘அய்யா புளூகிராஸ் பிரச்னை. ராஜா குதிரையில போகக் கூடாதுன்னு சொல்றாங்க. குதிரைப் பயன்பாடு அதிகமா இருக்கேன்னு குத்தம் சொல்றாங்க’ன்னு சொன்னேன்.


‘ராஜா குதிரையில போகாமல் குவாலிஸ்லயா போவாரு’ன்னு சொல்லிட்டு,
ஆ.ராசாவுக்குப் போன் பண்ணி ‘இதைச் சரி பண்ணுய்யா’ன்னு சொன்னார். ஒரு போனில் ரிலீஸ் பண்ண ஏற்பாடு செய்தார். ‘புலிகேசி’ வெளிவரக் காரணம் கலைஞர்தான். இதைப் பதிவு செய்வது என் கடமை.’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via