ராணுவம், விமானம், கடற்படைக்கு ரூ.500 கோடி வலிமைமிகு ட்ரோன்கள்

by Editor / 24-10-2021 07:03:00pm
ராணுவம், விமானம், கடற்படைக்கு ரூ.500 கோடி வலிமைமிகு ட்ரோன்கள்

இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு ரூ. 500 கோடி மதிப்பில் வலிமைமிகு ட்ரோட்கள் (ஆள் இல்லா விமானம்) வாங்கப்படவிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தான் எதைப் பற்றி பேச வேண்டும்? என நாட்டு மக்களிடம் அவர் அடிக்கடி யோசனையும் கேட்டு வருகிறார். அந்தவகையில் இன்று ஒலிபரப்பாகும் இந்த மாதத்துக்கான மன் கி பாத் நிகழ்ச்சிக்கு யோசனை வழங்குமாறு நாட்டு மக்களை அவர் கேட்டிருந்தார்

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, 82 வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:100 கோடி தடுப்பூசி இந்தியாவின் பெருமை மிக்க தருணம். இதன் மூலம் தேசம் புதிய உற்சாகத்துடன் முன்னேறி செல்கிறது. நமது தடுப்பூசி திட்டத்தின் வெற்றியானது, இது இந்தியாவின் சக்தியை உலகிற்கு எடுத்து காட்டியது. அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்தை பிரதிபலிக்கிறது.

எனது நாட்டு மக்களின் திறமை எனக்கு தெரியும். மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் எந்த ஒரு வாய்ப்பையும் நமது சுகாதார ஊழியர்கள் தவறவிடவில்லை என்பதையும் நான் அறிவேன். நமது சுகாதார ஊழியர்கள், தங்களுடைய கடுமையான உழைப்பாலும், மன உறுதிப்பாட்டாலும் ஒரு புதிய முன்மாதிரியை ஏற்படுத்தி உள்ளனர்.தடுப்பூசி திட்டத்தின் பின்னணியில் எண்ணற்றதன்னம்பிக்கை கதைகள் அடங்கி உள்ளன.இந்தியா எப்போதும் உலக அமைதிக்காக பணியாற்றி உள்ளது. வறுமை ஒழிப்பு, தொழிலாளர் நலன் உள்ளிட்ட விவகாரங்களில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

அன்றைய தினம், தேசத்தின் ஒற்றுமையை முன்னிலைப்படுத்தும் ஏதேனும் ஒரு நடவடிக்கைகளில் நம்மை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.அடுத்த மாதம், பகவான் பிர்சா முண்டாவின் ஜெயந்தியை இந்தியா கொண்டாட உள்ளது. அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுத்தது ஒருவரின் சொந்த கலாச்சாரத்தைப் பற்றி எப்படி பெருமை கொள்வது, சமூகத்தை கவனித்து அநீதியை எதிர்த்துப் போராடுங்கள். இளைஞர்கள் அவரைப் பற்றி படிக்க வேண்டும்.பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்கினால், ஏழை வியாபாரிகள் வீட்டில் பிரகாசம் ஏற்படும்.

போலீசில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2014 ம் ஆண்டு 1.05 லட்சமாக இருந்தது. இது தற்போது 2.15 லட்சமாக அதிகரித்துள்ளது.

போக்குவரத்திற்கும், வீடுகளில் பொருட்கள் விநியோகத்திற்கும், அவசர காலங்களில் உதவி செய்யவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க நாடு முயற்சி செய்து வருகிறது. அனைத்து தேவைகளுக்கும் ஏற்ப டுரோன்கள் களமிறக்கப்படும். கோவிட் தடுப்பூசி விநியோகத்திற்கு டுரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்தியாவில் உள்ள ட்ரோன் நிறுவனங்களிடம் ரூ.500 கோடி ‘வலிமைமிகு’ ட்ரோன்களை சப்ளை செய்வதற்கான ஆர்டர்களை ராணுவம், கடற்படை விமானப்படை வழங்கியுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த உரையின் போது உத்தர்கண்டை சேர்ந்த பூணம் என்னும் பெண் சுகாதார பணியாளருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தன் பகுதியில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுள்ளதை அவர் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். ஆற்றைக் கடந்து, மலையைக் கடந்து தடுப்பூசி போட்டோம் என்று கூறியதைக் கேட்டு பாராட்டினார் பிரதமர்.

 

Tags :

Share via