சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்வி.

by Editor / 09-11-2021 02:55:31pm
 சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்வி.

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 2015ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளது.
 
சென்னையில் சாலை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை நீரில் தத்தளிப்பதாக தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருக்கிறது என சென்னை மாநகராட்சி தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு வாரத்தில் நிலைமையை சரி செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும் என எச்சரித்தனர்.

மேலும், தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
நீர் வழிப் பாதைகளில் எந்த தடையும் இருக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், மழை வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்து இருப்பதாகவும் கூறினர். பாதி நாட்கள் தண்ணீருக்காகவும், மீதி நாள் தண்ணீரிலும் பொதுமக்கள் இறப்பதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

 

Tags :

Share via