580 ஆண்டுகளுக்கு பிறகு மிக நீண்ட நேர பகுதி அளவு சந்திரகிரகணம்

by Editor / 14-11-2021 09:55:22pm
580 ஆண்டுகளுக்கு பிறகு மிக நீண்ட நேர பகுதி அளவு சந்திரகிரகணம்

கடந்த முறை நீண்ட நேர சந்திரகிரகணமானது 1480-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி நிகழ்ந்தது. அடுத்த முறை இது போன்ற நிகழ்வு 2669-ம் ஆண்டுதான் ஏற்படும் என பிர்லா கோளரங்கத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்வி இயக்குனர் கூறியுள்ளார்.

சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. நிலவின் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் எனவும், பகுதி அளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தநிலையில் மிக நீண்ட நேர பகுதி அளவு சந்திர கிரகணம் வருகிற 19-ந் தேதி நிகழ்கிறது. 580 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் இந்த அரிய நிகழ்வை வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காணமுடியும்.

இது குறித்து கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்வி இயக்குனர் தேவிபிரசாத் திவாரி, நிருபர்களிடம் கூறியதாவது:-

பகுதி அளவு சந்திர கிரகணம் மதியம் 12.48 மணிக்கு தொடங்கி 4.17 மணிவரை நிகழும். இந்த சந்திரகிரகணத்தின் கால அளவு 3 மணி நேரம் 28 நிமிடம் மற்றும் 24 விநாடிகள் ஆகும்.

580 ஆண்டுகளுக்கு பிறகு இத்தனை நீண்ட நேரம் சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. அருணாசல பிரதேசம் மற்றும் அசாமின் சில பகுதிகளில் பகுதி அளவு சந்திரகிரகணத்தின் கடைசி தருணங்களை காண முடியும்.

கடந்த முறை நீண்ட நேர சந்திரகிரகணமானது 1480-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி நிகழ்ந்தது. அடுத்த முறை இது போன்ற நிகழ்வு 2669-ம் ஆண்டுதான் ஏற்படும்இவ்வாறு அவர் கூறினார்.

பகுதி அளவு சந்திர கிரகணத்தை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் பிராந்தியத்தில் தெளிவாக காண முடியும்.

 

 

Tags :

Share via