தெலுங்கானாவிலும் பரவிய ஒமைக்ரான்

by Editor / 15-12-2021 02:13:12pm
தெலுங்கானாவிலும் பரவிய ஒமைக்ரான்


தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு முதன் முதலில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது.
 
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர் ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரானின் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒமைக்ரானின் பாதிப்பு தெலுங்கானாவுக்கும் பரவியது.

தெலுங்கானாவில் 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கென்யாவை சேர்ந்த 24 வயது பெண்மணி ஐதராபாத்துக்கு வந்தார். இதேபோல சோமாலியா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் ஐதராபாத் விமான நிலையம் வந்தார். இந்த இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் கொல்கத்தாவில் இருந்து ஐதராபாத் வந்த 7 வயது சிறுமிக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11 நாடுகளில் இருந்து ஐதராபாத் திரும்பியவர்களுக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவில் இது தெரியவந்தது.

இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 17 பேருக்கும், டெல்லியில் 6 பேருக்கும், குஜராத்தில் 4 பேருக்கும் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via