வங்கியில் ரூ.1.80 கோடி மோசடி- வங்கி அதிகாரி தற்கொலை

by Editor / 15-12-2021 02:20:48pm
வங்கியில் ரூ.1.80 கோடி மோசடி- வங்கி அதிகாரி தற்கொலை

சஸ்பெண்டு செய்யப்பட்ட வங்கி அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கூட்டுறவு நில வள வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்று வட்டாரத்திலுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். தற்போது அரசு கூட்டுறவு வங்கி நகைக்கடனை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில் பல்வேறு மாவட்டத்தில் நகைக்கடனில் முறைகேடு இருப்பதாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கீரனூர் கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்தபோது நகையில்லாமல் உறவினர் பெயர்களில் ரூ.1.80 கோடிக்கு நகைக்கடன் முறைகேடு செய்தது தெரியவந்தது. வங்கியில் இருப்பில் உள்ள தங்க நகைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த திடீர் ஆய்வு உள்ளூர் அதிகாரிகளை கொண்டு நடத்தாமல் தஞ்சை மண்டல குழுவினர் மூலும் நடத்தப்பட்டது. அதில் நகை பொட்டலங்களில் மொத்த மதிப்பு 934 எனவும், மொத்தம் ரூ.3 கோடியே 63 லட்சத்து 14 ஆயிரத்து 200 கடன் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் வங்கியில் நகை பொட்டலங்கள் 832 மட்டுமே இருந்துள்ளன. அதற்கு ரூ.2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 700 கடன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நகையே இல்லாமல் ரூ.1 கோடியே 8 லட்சத்து 17 ஆயிரத்து 500 கடன் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வங்கியின் செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் கனகவேல் வங்கி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி வந்தனர். கீரனூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட வங்கி செயலாளர் நீலகண்டன் இன்று காலை கீரனூரில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவமானம் தாங்காமல் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via