கேரளாவில் கடந்த 7 ஆண்டுகளில் 4வது முறையாக பறவை காய்ச்சல் 20,268 கோழிகள், வாத்துகள் அழிப்பு

by Admin / 05-01-2022 03:45:25pm
கேரளாவில் கடந்த 7 ஆண்டுகளில் 4வது முறையாக பறவை காய்ச்சல்  20,268 கோழிகள், வாத்துகள் அழிப்பு

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன.
 
இப்பண்ணைகளில் உள்ள சில வாத்துகள் மற்றும் கோழிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தன. பறவைகள் திடீரென இறந்ததால் அவற்றின் மாதிரிகளை பண்ணையாளர்கள் போபாலில் உள்ள கால்நடை ஆய்வகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பினர்.

இதில் இறந்துபோன பறவைகளுக்கு எச் 5 என் 1 வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. இது கேரள மாநில கால்நடை துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு சென்ற கால்நடை துறை அதிகாரிகள் அங்கு பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்து மற்றும் கோழிகளை உடனே அழிக்க உத்தரவிட்டனர்.

அதன்படி பள்ளிப்பட்டு மற்றும் அம்பலபுழா பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் வளர்க்கப்பட்ட 11,143 கோழிகள் மற்றும் 9125 வாத்துகள் என மொத்தம் 20,268 பறவைகள் அழிக்கப்பட்டன. அவற்றை அதிகாரிகள் குழிதோண்டி புதைத்தனர்.

இதற்கிடையே நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இந்த பண்ணைகளில் இருந்த 13, 500 முட்டைகள், 9650 கிலோ கோழி தீவனங்களும் அழிக்கப்பட்டன. இப்பகுதியில் உள்ள பண்ணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் கடந்த 7 ஆண்டுகளில் 4வது முறையாக பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதன் காரணமாக அங்கு பறவை பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் இழப்பை சந்தித்து உள்ளனர்.

பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் இன்று கேரள கால்நடை துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பண்ணைகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும், அங்கு வசிப்போருக்கு நோய் அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக சுகாதார பணியாளர்கள் குன்னும்மா, தகழி, குட்டநாடு பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
 

 

Tags :

Share via