பழனி; முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று மாலை நடைபெறுகிறது.

by Editor / 17-01-2022 02:06:33pm
பழனி; முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று மாலை நடைபெறுகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று மாலையில் மலைஅடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கோயில்களில் 18 ஆம் தேதி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பழனியில் வழக்கமாக விமர்சியாக நடைபெறக் கூடிய திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று எளிய முறையில் பக்தர்கள் இன்று நடைபெற உள்ளது. மேலும் நாளை நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சியும் பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திற்குள் சிறிய அளவிலான தேரைக் கொண்டு நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசத் திருவிழாவையொட்டி ஆண்டு தோறும் பாதயாத்திரையாக வரக்கூடிய பழக்கத்தை கொண்டுள்ள பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்துள்ளனர். மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் வலம் வந்துவிட்டு பாத விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு வீட்டுக்குச் பக்தர்கள் சென்று வருகின்றனர். மேலும் பக்தர்கள் சிலர் இரண்டு நாட்களுக்கு தங்கியிருந்து புதன்கிழமை சாமி தரிசனம் செய்யவும் தயாராக வந்துள்ளனர். வழக்கமாக கோலாகலமாக நடைபெறக்கூடிய பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவில் பக்தர்களுடன் நடைபெற்று வருகிறது.
 

 

Tags :

Share via