ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யவேண்டும் - வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

by Writer / 21-01-2022 07:20:31pm
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யவேண்டும் - வியாபாரிகள் சங்கம் கோரிக்கை


ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என விக்கிரமராஜா பேட்டியளித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் வணிகர் சங்கங்களின் சார்பில் கொடியேற்று விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:

கொரோனா போன்ற பேரிடர் காலங்களில், மத்திய,மாநில அரசுகள் வணிகர்களுக்கு உதவிகள் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் வணிகர்கள் மீது விதிக்கப்படும் அபராதம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.

தமிழக அரசு பொங்கலுக்கு வழங்கிய தொகுப்பு பொருட்களுக்கு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்தவர்கள் வெளிமாநிலங்களில் பொருட்களை கொள்முதல் செய்தனர். வரும் காலங்களில் கொள்ளுதல் செய்யும் பணிகளை வணிகர் சங்கங்களிடம் ஒப்படைத்தால், பொருட்கள் தரமாக கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உள்ளதால், மக்கள் சனிக்கிழமைகளில் பொருட்கள் வாங்க கூட்டமாக வருகிறார்கள். இதை தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும். ஜவுளிக்கு உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி., 12 சதவிகிதத்தை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் ஐந்து சதவிதமாக குறைக்க வேண்டும். காலணிகளுக்கு உயர்த்தப்பட்ட வரியை குறைக்க வேண்டும்.
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். திருப்பத்துார் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், மண்டலத் தலைவர் கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துார் மாவட்ட பொறுப்பாளர்கள்,வாணியம்பாடி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் உடனிருந்தனர்

 

Tags :

Share via