மதுக்குடிக்க அழைத்து மறுத்ததால் தலையில் கத்திக்குத்து

by Editor / 05-02-2022 10:28:53am
மதுக்குடிக்க அழைத்து மறுத்ததால் தலையில் கத்திக்குத்து


சேலம் மாவட்டம் எடப்பாடி பக்கநாடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் தொழிலாளி. இவரும், ஜலகண்டாபுரம் கட்டிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் சவுந்தரராஜன் ,மணிகண்டன் ,ஆகிய 3 பேர் இரவு ஜலகண்டாபுரம் அருகே குண்டத்து மேடு அரசு மதுபான கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்தனர்.

எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு பகுதியை சேர்ந்த சக்திவேல்  இவர் அந்த பகுதியில் பாஸ்புட் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரும் முருகேசனின் நண்பர் ஆவார். மேலும் சக்திவேல், முருகேசனுக்கும் இடையே பணம், கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது.


இதனிடையே முருகேசன் மது அருந்திக்கொண்டிருந்த இடத்துக்கு சக்திவேல் வந்துள்ளார். இதனால் முருகேசன், சக்திவேலை தன்னுடன் மதுஅருந்த வருமாறு கூப்பிட்டுள்ளார். இதற்கு சக்திவேல் கடன்காரர்களிடம் சேர்ந்து நான் மது குடிப்பதில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்தார். தொடர்ந்து அவர், முருகேசன், மணிகண்டனை சரமாரியாக குத்தினார். இதை தடுக்க வந்த சவுந்தரராஜனையும் குத்தினார். இதில் அவரது தலையில் கத்திக்குத்து விழுந்தது. அந்த கத்தியை பிடுங்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டு சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். தலையில் பாய்ந்த கத்தியுடன் தொழிலாளியான சவுந்தரராஜன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, தலையில் இருந்த கத்தியை அகற்றினர்.

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்த புகாரின்பேரில் ஜலகண்டாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : தலையில் கத்திக்குத்து

Share via