இந்தியாவின் அணுகு முறைக்கு நன்றி தெரிவித்தது உக்ரைன் தூதர் இகோர் பொலிகா

by Admin / 16-02-2022 12:40:33pm
 இந்தியாவின் அணுகு முறைக்கு நன்றி தெரிவித்தது உக்ரைன்  தூதர் இகோர் பொலிகா

ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
 
உக்ரைன் மற்றும் உக்ரைனை சுற்றியுள்ள நிலைமை கடினமானது. ஆனால் சிக்கலானது அல்ல. எங்களது நட்பு நாடுகளை அமைதி காக்கும்படி எங்கள் அதிபர் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த மோதலுக்கு நாங்கள் இராஜதந்திர தீர்வுகளை தேடி வருகிறோம். கெய்வ் மற்றும் மாஸ்கோ இடையே பேச்சு வார்த்தைகள் இன்னும் நடந்து வருகின்றன.

உக்ரைனில் உள்ள சுமார் 20,000 மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். இந்திய மாணவர்களை பெருமளவில் வெளியேற்றுவதற்கு உடனடி காரணத்தை நான் பார்க்கவில்லை. 

அவர்கள் நிலைமையைக் கண்காணிக்க வேண்டும், ஆனால் பீதி அடையக்கூடாது. இந்த விவகாரத்தில் சம நிலையான அணுகு முறையை எடுத்த இந்திய அரசுக்கு நன்றி. 

உக்ரைன் அரசாங்கம் தொடர்ந்து வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ளது. அனைத்து நிகழ்வுகள் குறித்தும் இந்திய தரப்பிற்கு தகவல் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via