கிணற்றில் விழுந்த புலிக்குட்டி உயிருடன் மீட்பு

by Admin / 18-02-2022 04:50:48pm
 கிணற்றில் விழுந்த புலிக்குட்டி உயிருடன் மீட்பு

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த 6 மாதமே ஆன புலிகுட்டி உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி பகுதி, முத்தங்கா வனப்பகுதியை ஒட்டியுள்ளது. 

இந்நிலையில் பத்தேரி அருகே உள்ள தொட்டப்பக்குளம் பகுதியில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று அப்பகுதியில் உள்ள தனியாரின் நிலத்தில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்துள்ளது.

இந்நிலையில், புலி விழுந்த கிணறு பகுதியில் நேற்றிரவு தொடர்ந்து நாய்கள் குரைத்து கொண்டே இருந்துள்ளது. காலையிலும் நாய்கள் தொடர்ந்து குறைத்துக் கொண்டு இருந்ததால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் கிணற்றை பார்த்துள்ளனர். 

அப்போது தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் புலிக்குட்டி ஒன்று உயிருடன் இருப்பதை கண்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் புலியை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். 

ஆனால் முடியவில்லை. இதனால், இறுதியாக புலிக்கு மயக்க ஊசி செலுத்தி வலை மூலம் உயிருடன் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை அளித்த வன கால்நடை மருத்துவர்கள் அது நல்ல உடல் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்த குட்டி புலியை தாயுடன் சேர்ப்பதற்கான முயற்சிகளை கேரள வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via