அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை நிறைவு

by Admin / 18-02-2022 05:16:22pm
அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை நிறைவு

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

ஆணையத்தின் 36-வது கட்ட விசாரணை, தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது.

இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பொறுப்பிலிருந்த முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி , கூடுதல் காவல்துறை தலைவர் (சட்டம்-ஒழுங்கு) விஜயகுமார் உள்பட 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

இந்நிலையில் ஒருநபர் ஆணையத்தின் 36-வது அமர்வு விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், `36-வது அமர்வு விசாரணையில் ஆஜராவதற்காக 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 6 பேர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். 

இதன்மூலம், ஒருநபர் ஆணையத்தின் 36-வது அமர்வுடன் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சாட்சிகள் விசாரணை முடிவுற்றது. 

ஒருநபர் ஆணையம் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக தனது விசாரணையை 9.8.2018 ஆம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல் இதுவரை நடந்த 36 கட்ட விசாரணையிலும் சேர்த்து மொத்தம் 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மொத்தம் 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. அழைப்பாணை கொடுக்கப்பட்டவர்களில் மனுதாரர் தரப்பில் 781 சாட்சிகள், அரசு தரப்பில் 255 சாட்சிகள், ஆணையமே முன்வந்து 12 சாட்சிகள் என 1048 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது. 

இதுபோல மனுதாரர் தரப்பில் 1189 ஆவணங்கள், அரசு தரப்பில் 262 ஆவணங்கள், ஆணையத்தால் விசாரிக்கப்பட்டவர்களிடமிருந்து 93 ஆவணங்கள் என 1544 ஆவணங்களில் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

ஆணையத்தின் முழுமையான விசாரணைக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பளித்த மாவட்ட நிர்வாகம், காவல் துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம், பத்திரிக்கைகள் என அனைவருக்கும் ஒரு நபர் ஆணையம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது. 

இனி, ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை தொகுக்க 3 மாத கால அவகாசம் தேவைப்படலாம். அது நிறைவுற்றதும் ஒரு நபர் ஆணையத்தின் முழு அறிக்கையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

 

Tags :

Share via