கோடி அருவி கொட்டுதே குற்றாலத்தில்... மக்கள் யாருமின்றி..!

by Editor / 17-05-2021 09:32:28am
கோடி அருவி கொட்டுதே குற்றாலத்தில்... மக்கள் யாருமின்றி..!

அரபிக் கடலில் உருவாகி வலுப்பெற்ற 'டவ் தே' புயல் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசம், கொடுமுடியாறு அணை ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழை பதிவானது. சேர்வலாறில் 33 மி.மீ., களக்காட்டில் 28.40, நாங்குநேரியில் 16.50, ராதாபுரத்தில் 15, அம்பாசமுத்திரத்தில் 11, மணிமுத்தாறில் 9.20, மூலக்கரைப்பட்டியில் 8, சேரன்மகாதேவியில் 3.60, நம்பியாறு அணையில் 3, பாளையங்கோட்டையில் 2, திருநெல்வேலியில் 1 மி.மீ. மழை பதிவானது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பாபநாசம் அணைக்கு நேற்று விநாடிக்கு 2,629 கனஅடி தண்ணீர் வந்தது. 255 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 106.60 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 119.36 அடியை எட்டியது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 734 கனஅடி நீர் வந்தது. 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் அரையடி உயர்ந்து 86 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 42.49 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 12.53 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 15 அடியாக இருந்தது.

தென்காசி

இதேபோல், தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 42.40 மி.மீ. மழை பதிவானது. அடவிநயினார் அணையில் 35 மி.மீ., ஆய்க்குடியில் 22, செங்கோட்டையில் 18, கருப்பாநதி அணையில் 13, சங்கரன்கோயிலில் 11, கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 6, சிவகிரியில் 2 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணையில் நீர்மட்டம் 65.90 அடி, ராமநதி அணையில் 52 அடி, கருப்பாநதி அணையில் 48.89 அடி, குண்டாறு அணையில் ஒன்றரை அடி உயர்ந்து 29.12 அடி, அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 33 அடியாக இருந்தது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை சாரல் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும். கடந்த ஆண்டு கரோனா பரவலால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு மே மாதத்திலேயே சாரல் காலம் போல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த ஆண்டும் கரோனா பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின்றி குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.

 

Tags :

Share via