டவ்-தே புயலால் ஓ.என்.ஜி.சி. கப்பல் மூழ்கியது: 26 பேர் பலி- 50 பேரை தேடும் பணி!

by Editor / 20-05-2021 07:30:18am
டவ்-தே புயலால்  ஓ.என்.ஜி.சி. கப்பல் மூழ்கியது: 26 பேர் பலி- 50 பேரை தேடும் பணி!

மும்பை/ அகமதாபாத்; அதிதீவிர புயலான டவ்-தே கோரத்தாண்டவமாடியதில் அரபிக் கடலில் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான எண்ணெய் துரப்பண கப்பல் மூழ்கியதில் 26 பேர் பலியாகினர். மேலும் காணாமல் போன 50 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

லட்சத்தீவுகள் அருகே அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் குஜராத் மாநிலத்தில் திங்கள்கிழமை கரையை கடந்தது. டவ்-தே புயலானது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் டவ்-தே புயலால் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கர்நாடகாவில் 200க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.

மகாராஷ்டிராவிலும் டவ்-தே புயல் ருத்ரதாண்டவமாடியுள்ளது. மும்பையில் 70% மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குஜராத்தில் டவ்-தே புயலின் சீற்றத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 49 என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான கிராமங்களிம் மின்சார சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

குஜராத்தில் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் புயல் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்தில் மீட்பு, நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் குஜராத், டையூவில் புயல் பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்தார்.

இதனிடையே அரபிக் கடலில் எண்ணெய் துரப்பண பணியில் ஈடுபட்டிருந்த ஓ.என்.ஜி.சி. கப்பல்களின் நங்கூரங்கள் அறுபட்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து கப்பல்களில் தங்கி பணிபுரிந்து வந்த 800க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

ஒரு கப்பலில் இருந்த 26 பேர் கடலில் மூழ்கி மரணம் அடைந்தனர். அந்த கப்பலில் இருந்த மேலும் 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via