தென்மாவட்ட ரயில்நிலையங்களில் அந்தந்தப்பகுதிகளில் பிரசித்திபெற்ற பொருட்கள் விற்பனை

by Editor / 30-05-2022 09:19:51pm
தென்மாவட்ட ரயில்நிலையங்களில் அந்தந்தப்பகுதிகளில் பிரசித்திபெற்ற பொருட்கள் விற்பனை

மதுரை கோட்டத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் மதுரை, திருநெல்வேலி போன்ற ரயில் நிலையங்களில் சுங்குடி சேலை மற்றும் பனை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மதுரை ரயில் நிலையத்தில் தற்போது சுங்குடி சேலை விற்பனை நடைபெற்று வருகிறது.  இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மதுரை கோட்டத்தில் 30 ரயில் நிலையங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான பொருட்களை விற்பதற்கு விருப்ப மனு கோரப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சியில் மக்ரூன், ராமேஸ்வரத்தில் கடல் பாசி பொருட்கள், கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விருதுநகர் மற்றும் சாத்தூரில் காராச்சேவு, தென்காசி மற்றும் செங்கோட்டையில் மூங்கில் பொருட்கள், ராமநாதபுரத்தில் கருவாடு, திருச்செந்தூரில் பனை பொருட்கள், காரைக்குடியில் ஆத்தங்குடி டைல்ஸ், பழனியில் பஞ்சாமிர்தம், பரமக்குடியில் மிளகாய் வத்தல், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், சங்கரன்கோவிலில் மாம்பழம் போன்ற விவசாய பொருட்கள், சிவகாசியில் டைரிகள் நோட்டு புத்தகங்கள், மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள், புதுக்கோட்டையில் பலாப்பழம், சிவகங்கையில் செட்டிநாடு கொட்டான், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா, கொடைக்கானல் ரோட்டில் பன்னீர் திராட்சை, திருமங்கலத்தில் கைலிகள், ஒட்டன்சத்திரத்தில் வெண்ணை, அம்பாசமுத்திரத்தில் பத்தமடை கோரை பாய், மணப்பாறையில் முறுக்கு, புனலூரில் மிளகு, கொட்டாரகராவில் முந்திரி ஆகியவை விற்பனை செய்வதற்கு விருப்ப மனு கோரப்பட்டுள்ளது. விருப்ப மனுவை www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனு க்களை ஜூன் 5ஆம் தேதி மாலை 3 மணி வரை மதுரை கோட்ட அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது srdcm@mdu.railnet.gov.in என்ற இணையதள முகவரிக்கும் அனுப்பலாம். குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் 15 நாட்களுக்கு எந்த கட்டணமும் செலுத்தாமல் நிலையத்தின் முக்கிய பகுதியில் இந்த உள்ளூர் பொருட்களை விற்றுக் கொள்ளலாம். பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள் மற்றும் அரசு அனுமதியுடன் பொருட்கள் தயாரிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9003862967 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அறிவித்துள்ளார்.

 

Tags : Sale of popular goods in the respective areas at the Southern Railway Stations

Share via