ஒடிசாவில் புதிய மந்திரிசபை: புதிய மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளனர்

by Editor / 05-06-2022 08:23:57am
ஒடிசாவில் புதிய மந்திரிசபை: புதிய மந்திரிகள் இன்று  பதவியேற்க உள்ளனர்

 ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த மந்திரிகள் அனைவரும் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். புதிய மந்திரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கின்றனர் .

ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சி சார்பில் 5-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார், நவீன் பட்நாயக். அங்கு 2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் நவீன் பட்நாயக் தனது மந்திரி சபையை 3 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். எனவே தற்போதைய மந்திரிகள் அனைவரையும் பதவி விலகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி மாநில மந்திரிகள் அனைவரும் நேற்று ஒருவர் பின் ஒருவராக பதவி விலகினர். தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் எஸ்.என்.பாட்ரோவிடம் வழங்கினர். மொத்தமுள்ள 20 மந்திரிகளும் கடிதம் கொடுத்து விட்டதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மந்திரிகள் அனைவரும் பதவி விலகியுள்ளதை தொடர்ந்து, புதிய மந்திரி சபை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கிறது. இந்த நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் காலை 11.45 மணிக்கு நடக்கிறது. புதிய மந்திரி சபையில் புதுமுக எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

அதேநேரம் 2024-ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சியை பலப்படுத்தும் நோக்கில் மூத்த தலைவர்களை கட்சிப்பணி ஆற்ற அனுப்பி வைக்க நவீன் பட்நாயக் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தலில் பிஜூ ஜனதாதளம் சார்பில் களமிறக்கப்பட்ட 3 வேட்பாளர்களும் நேற்று முன்தினம் போட்டியின்றி வெற்றி பெற்றதுடன், அங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று கட்சி பலமிக்கதாக இருக்கும் சூழலில் இந்த மந்திரிசபை மாற்றம் நடைபெறுகிறது. 147 உறுப்பினர் கொண்ட ஒடிசா சட்டசபையில் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : New cabinet in Odisha: New ministers are due to take office today

Share via