தடம் மாறும் தகவல் களால் செல்போனுக்கு தடை விதித்த அதிமுக.

by Editor / 14-06-2022 11:37:22am
தடம் மாறும் தகவல் களால் செல்போனுக்கு தடை விதித்த அதிமுக.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் மொபைல் போன் பயன்படுத்த தடைவிதித்து அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மூத்த நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பாகவும் பொதுக்குழுவை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் என சுமார் நூறுக்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுக அலுவலகத்தில் நடைபெறக் கூடிய எந்த ஒரு ஆலோசனைக் கூட்டம் ஆனாலும் சரி வாக்குவாதங்கள், காரசார விவாதங்களும் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு நடைபெறக்கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் உட்கட்சி பிரச்னைகள், கட்சி சார்ந்த ரகசியங்கள் கடந்த சில மாதங்களாகவே வெளியே கசிந்து வருகிறது. இந்த தகவல் எவ்வாறு கசிகிறது என்பதை ஆராய்ந்த அதிமுக, கூட்டத்தில் பங்கேற்கும் சிலர் செல்போனை ஆன் செய்து வைத்திருப்பதாகவும், அதன் மூலம் வெளியே இருக்கும் சிலர் ஒட்டு கேட்பதாகவும்,அந்த தகவல்கள் வேறு இடங்களுக்கும்,உளவுத் துறைக்கும் கசிவதாகவும் தெரியவந்திருக்கிறது. ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையேயும், கட்சி நிர்வாகிகளுக்கு இடையும் எழும் விவாதங்களும் அச்சுமாறாமல் உடனுக்குடன் மீடியாக்களில் வருவதாலும் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்திருக்கிறது.
குறிப்பாக சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவை விமர்சித்து பொன்னையன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு, அதிமுக – பாஜக இடையிலான உறவுக்கும் விரிசலை ஏற்படுத்தும் சிக்கலை உருவாக்கியது. அதன் காரணமாக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரை யாருக்கும் செல்போன் எடுத்துவர அனுமதியில்லை என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் அதிமுக கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் எம்.பி. மைத்திரேயன், செல்போனை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்ததால் கோபத்துடன் கூட்டத்தை புறக்கணித்து திரும்பிச் சென்றார்
பொதுவாக அதிமுக செயற்குழு,பொதுக்குழு போன்ற முக்கியமான நிகழ்வுகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கே இந்த முறை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலரால் கசியும் தகவலால் ஒட்டுமொத்த நிர்வாகிகளுக்கும் செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருப்பது மூத்த நிர்வாகிகளிடையே அதிர்ச்சி யை  ஏற்படுத்தியுள்ளது. கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது சரியானதல்ல என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் கள்
அதிமுக வின் முக்கிய நபர்கள்.

 

Tags :

Share via