திமுக -பாஜக கூட்டணி கிடையாது -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

by Editor / 29-07-2022 09:16:26am
திமுக -பாஜக கூட்டணி கிடையாது -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி, அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்கு பிறகு, மோடி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட 1.30 மணி நேர ஆலோசனைக்குப் பிறகு எல்.முருகன் உள்ளிட்டோர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியை தமிழக அரசு மிக சிறப்பாக செய்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் 5 ஆயிரம் ஆண்டு தொன்மையை பிரதிபலித்தனர். ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனையில் அரசியல் பேசவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர், முதலமைச்சராக நடந்துகொண்டார். அவருக்கு பாராட்டுகள்.


ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய காரணத்தால் முதலமைச்சரை பாராட்டுகிறோம், அதற்காக திமுக – பாஜக கூட்டணியா என கேட்டால் இல்லை. பாஜக கொள்கை ரீதியாக செல்லக்கூடிய கட்சி. பாஸ்போர்ட் விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முறையான விசாரணை நடத்தினால், இதில் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகும். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அடுத்தடுத்து வரக்கூடிய நிகழ்வுகளுக்கு இந்தத் தீர்ப்பு முன் மாதிரியாக இருக்கும்.” என்றார்.

 

Tags : There is no DMK-BJP alliance - BJP state president Annamalai

Share via