தமிழ்நாட்டின்  ரவிவர்மா ...

by Editor / 24-07-2021 05:30:54pm
தமிழ்நாட்டின்  ரவிவர்மா ...

 

கேரள ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்கள் எப்படி உயிரோட்டமாக காலங்காலமாக பேசப்படுவது போல... இன்றைய காலகட்டத்தில் அதுவும் நம் தமிழ்நாட்டில் ஒரு ரவிவர்மா என பேசப்பட்ட ஒரு அற்புத கலைஞனை நாம் இன்று இழந்து தவிக்கிறோம்.
ஆம்!  ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் பெரும்பாலும் கவிதையாய், ஒரு மழைலையாய், நம்மிடையே உறவாடும் கதாப்பாத்திரங்கள் என  இவரது தூரிகையில் வாழும். நம்மிடையே உள்ள உறவுகளை நம் கண்முன்னே நடமாடுகின்ற தேவதைகளை அள்ளி எடுத்தாற்போல படைப்புகள்.


கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த கடைசி மகன். கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார்.


புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. ஆனந்த விகடனில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு 12 மணியளில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 43.. ‘’ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது’’ என நண்பர்களிடம் சொன்னவர் அவராகவே மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டிருக்கிறார்.

பின்னர் அவர் குடும்பத்தில் பலருக்கும் கொரோனா தொற்றுப்பரவ ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னர் மூச்சடைப்பின் காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தொற்று நுரையீரல் முழுக்கப் பரவிய நிலையில் மருத்துவமனைக்கு வந்ததால், நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட மரணம் அடைந்தார் ஓவியர் இளையராஜா.


ஓவியர் இளையராஜாவின் ‘திராவிடப் பெண்கள்' ஓவியங்கள் பெரும்புகழ் பெற்றவை. அடுப்படியில் சமைக்கும் பெண், வாசலில் உட்கார்ந்து பூ கட்டும் பெண், ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்க்கும் பெண் என கிராமத்துப் பெண்களை மிகத்தத்ரூபமாக வரைவதில் தேர்ந்தவர் இளையராஜா.
-----------
திராவிடப் பெண்கள் 
நான் வளர்ந்த சூழல். எனது ரசனை இரண்டும் காரணமாக இருக்கலாம். பெண்களின் அழகு, நளினம், பொறுமை போன்றவை என்னைக் கவர்ந்ததாலும் இருக்கலாம். இளம்பருவத்தில் என் ஐந்து அக்காள்கள், ஐந்து அண்ணிகள், அவர்களின் குழந்தைகள் என்று என்னைச் சுற்றிலும் நிறையப் பெண்கள். அண்ணன்கள் எல்லாம் வெளிநாட்டில் வேலை பார்த்தார்கள். இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒருமுறை இரண்டு மாத லீவில் வருவார்கள். அதுதான் அண்ணிகள் மகிழ்ச்சியாக இருக்கும் காலம். மற்றக் காலங்களில் அவர்கள் வேலை செய்வார்கள், பேசுவார்கள், இருப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மாதக் கனவிலேயே, கற்பனையிலேயே அவர்கள் வாழ்க்கை கழியும். இதை அருகிலிருந்து பார்த்தவன். மேலும் கிராமத்திலும் பல அக்காள்களை, தங்கைகளைப் பார்த்தவன். அவர்களது கனவை, கற்பனைகளை, சந்தோஷத்தை, துக்கத்தை, அவற்றை வெளிக்காட்டாத அவர்கள் மௌனத்தை என் ஓவியத்தில் கொண்டுவர ஆரம்பித்தேன். அவர்கள் ஆழ்மனதில் ஒன்று ஓடும், செயல் ஒன்றாக இருக்கும். காய்கறி நறுக்கிக் கொண்டிருப்பார்கள், சிந்தனை வேறெங்கோ இருக்கும்.
- (எஸ்.இளையராஜா எழுதியது)

 

Tags :

Share via