கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொன்ற பயங்கரம்

by Staff / 17-09-2022 01:13:27pm
கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொன்ற பயங்கரம்

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் இளம் பெண்ணை நிதி நிறுவனத்தின் மீட்பு முகவர் டிராக்டர் ஏற்றிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் இச்சாக் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
வியாழக்கிழமை நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒரு மாற்றுத்திறனாளி விவசாயியின் மகள். அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோத்தே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: டிராக்டரை மீட்க விவசாயி வீட்டிற்கு வந்த நிதி நிறுவன அதிகாரிக்கும், விவசாயிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் மகள் டிராக்டர் சக்கரத்தில் விழுந்தார். தனியார் நிதி நிறுவன மீட்பு முகவர், மேலாளர் உட்பட 4 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஎஸ்பி தெரிவித்தார்.
மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவிக்காமல் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாகவும், பின்னர் டிராக்டர் முன் வந்து விழுந்த பெண்ணை ஏற்றிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா, நிறுவனம் இந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்யும் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

"ஹசாரிபாக் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தமும், கவலையும் அடைந்துள்ளோம். ஒரு மனித சோகம் நிகழ்ந்துள்ளது. தற்போதுள்ள மூன்றாம் தரப்பு வசூல் நிறுவனங்களைப் பயன்படுத்தும் நடைமுறையை நாங்கள் பரிசீலிப்போம்" என்று ஷா ஒரு அறிக்கையில் கூறினார்.

 

Tags :

Share via