ATM கார்ட்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை

by Staff / 17-09-2022 01:19:32pm
ATM கார்ட்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை

ஆன்லைன் மூலமாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் மோசடிகளில் சிக்குவதும், பணத்தை இழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆன்லைன் மோசடிகளில் நடப்பதை தடுக்கும் விதமாக அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் மோசடிகளில் சிக்குவதை தடுக்கவும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்படுவதை பாதுகாக்கவும் கார்டு-ஆன்-ஃபைல் (CoF) டோக்கனைசேஷன் என்ற புதிய விதிமுறையை அக்டோபர் 1ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அமல்படுத்த உள்ளது.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை டோக்கனைசேஷன் செய்து கொள்ளாவிட்டால், அந்த குறிப்பிட்ட கார்டின் சிவிவி எண், காலவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை எந்தவொரு வணிக நிறுவனமோ, பணப்பறிமாற்ற ஆப்களோ, ஆன்லைன் விற்பனை ஸ்டோர்கள் அல்லது இ-காமர்ஸ் நிறுவனங்கள் சேமித்து வைப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்கிறது. கார்டு-ஆன்-ஃபைல் (CoF) என்பது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சம்பந்தப்பட்ட சிவிவி எண், காலாவதி தேதி போன்ற தகவல்களை கொண்டு பணப்பரிமாற்றம் செய்வதற்கு பதிலாக, குறிப்பிட்ட டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு வழங்கப்படும் டோக்கன் எண்ணைக் கொண்டு வணிக நிறுவனங்கள் மற்றும் ஃபின்டெக் ஆப்களில் பணப்பரிமாற்றம் செய்ய அனுமதிப்பதாகும்.

டோக்கனைசேஷன் செய்வதற்கு குறிப்பிட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாடிக்கையாளர் கோரிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் கோரிக்கையானது, கார்டு நெட்வொர்க்கிற்கு அனுப்பப்படும். அங்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழங்குநரின் ஒப்புதலுடன் தனிப்பட்ட தகவல்கள் சேமிக்கப்பட்டு, வாடிக்கையாளருக்கான டோக்கன் எண் வழங்கப்படும்.

பழைய நடைமுறையில், ஆன்லைன் ஸ்டோர்களில் பொருட்களை வாங்கினால் சிவிவி, காலாவதி தேதி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பதிவிட வேண்டும். ஆனால் இப்போது கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி பொருளை வாங்கினால், சம்பந்தப்பட்ட வங்கியிடம் வணிகர் டோக்கனைஸ் செய்ய கார்டு நெட்வொர்கிடம் அனுமதி கேட்பார். ஒப்புதல் பெறப்பட்டதும், 16 இலக்க அட்டை எண், கார்டு நெட்வொர்க்கால் உருவாக்கப்பட்டு டோக்கனுடன் மாற்றப்பட்டு சில்லறை விற்பனையாளருக்கு திருப்பி அனுப்பப்படும். அந்த டோக்கன் எண் வாடிக்கையாளரின் எதிர்கால பரிவர்த்தனைக்காக சேமித்து வைக்கப்படும். வழக்கம் போலவே வாடிக்கையாளர்கள் சிசிவி மற்றும் ஓடிபி எண்ணை பதிவிட்டு பரிவர்த்தனையை மேற்கொள்ள அனுமதிக்கலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் குறித்த தகவல்களை பகிர்வதை விட, டோக்கனைசேஷன் முறையைப் பயன்படுத்துவது தகவல்களை பாதுகாக்க உதவுகிறது. கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் முறை அமல்படுத்தப்பட்டால், ஆன்லைன் ஸ்டோர்கள், பணப்பரிமாற்ற ஆப்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் என எவையும் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த வகையிலும் சேமிக்க முடியாது.

 

Tags :

Share via