சேலம் ரயில்வே கோட்டத்தில் புதிய ரயில்களை இயக்க வேண்டும்’

by Staff / 28-09-2022 02:08:15pm
சேலம் ரயில்வே கோட்டத்தில் புதிய ரயில்களை இயக்க வேண்டும்’

சேலம் ரயில்வே கோட்டத்தில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.சேலம் ரயில்வே கோட்டத்தின் ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ. ஜி. சீனிவாஸ் தலைமை வகித்தாா். கூடுதல் கோட்ட மேலாளா் பி. சிவலிங்கம், கோட்ட முதுநிலை வணிக மேலாளா் இ. ஹரி கிருஷ்ணன், முதுநிலை இயக்க மேலாளா் எம். பூபதிராஜா, முதுநிலை கோட்ட பொறியாளா் எஸ். கண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் 16 போ் பங்கேற்றனா். இதில் கோட்ட மேலாளா் ஏ. ஜி. சீனிவாஸ் பேசியதாவது:

பயணிகளின் தேவைகளை பூா்த்தி செய்வதில் சேலம் கோட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் கோட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கோவை - மேட்டுப்பாளையம், சேலம் - விருத்தாசலம் பகுதிகளில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளா் இ. ஹரி கிருஷ்ணன் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்டத்தின் சிறப்பான செயல்பாடுகள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாடு, வருவாய் ஈட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வருவதைக் குறிப்பிட்டாா். மேலும், கோவை - ஷீரடி இடையே பாரத் கௌரவ் ரயிலை இயக்கியதன் மூலம் இந்திய ரயில்வேயில், பாரத் கௌரவ் ரயிலை இயக்கிய முதல் ரயில்வே கோட்டம் என்ற பெருமையை சேலம் ரயில்வே கோட்டம் பெற்றுள்ளது என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் புதிய ரயில்களை இயக்க வேண்டும், ரயில்களை கூடுதல் நடைகள் இயக்க வேண்டும், குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லுதல், புதிய நடைமேடைகள் கட்டுதல், ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதில், தெற்கு ரயில்வேயின் மண்டல ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினராக சேலம் கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் இளங்கவி (ஈரோடு) ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

 

Tags :

Share via