சத்யாவுக்கு நடந்த துயரத்தை நினைத்து நொறுங்கி போய் உள்ளேன் - முதல்வர்

by Staff / 15-10-2022 05:09:17pm
சத்யாவுக்கு நடந்த துயரத்தை நினைத்து நொறுங்கி போய் உள்ளேன் - முதல்வர்

மாணவி சத்யாவுக்கு நடந்தது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நிகழக் கூடாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதன் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்தைக் கூற கடமைப்பட்டு உள்ளேன். வேதனையுடன் இதை தெரிவிக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை நினைத்து நான் நொறுங்கி போய் உள்ளேன். நான் மட்டுமல்ல, இதைப் படித்த, அறிந்து கொண்ட அனைவரும் துக்கத்தில்தான் இருப்பீர்கள். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நிகழக் கூடாது.

இது அல்ல நாம் காண நினைக்கக் கூடிய சமூகம். இனி எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்று நடக்காத வண்ணம் தடுக்கக் கூடிய கடமை ஒரு சமூகமாக நமக்கு இருக்கிறது. தங்களின் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், தனித் திறன், அறிவு, ஆற்றல், சமூக நோக்கம் கொண்ட மனப்பான்மை கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். பாடப் புத்தக கல்வி மட்டுமல்ல, சமூகக் கல்வியும் அவசியமானது. தன்னைப் போன்று ஓர் உயிரை மதிக்கவும், பாதுகாக்கவும் கற்றுத் தர வேண்டும். நல்ல ஒழுக்கம், பண்பும் கொண்டவர்களாக அவர்கள் வளர்ந்து, வாழ்ந்து சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.

அவர்கள் எந்த வகையிலும் திசை மாறி சென்று விடாதபடி வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது. இயற்கையில் ஆண்கள் வலிமையானவர்களாக இருக்கலாம். ஆனால், அந்த வலிமை பெண்களை மதிக்கவும், பாதுகாப்பை தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

சில இளைஞர்கள் என்ன மாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. பள்ளி, கல்லூரி, பெற்றோர்கள் இளைய சமூகத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களை வளர்க்க வேண்டும். அப்படி பாதுகாக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அவர்களை வேலைக்கு தகுதியானவர்களாக மாற்றுவது என்ற சக்கர சுழற்சியில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

 

Tags :

Share via