பச்சைகிளிகள் வாங்கி வளர்ப்பில் ஈடுபட்டால், 6 மாதம் வரை சிறை.

by Editor / 03-11-2022 09:06:33pm
பச்சைகிளிகள் வாங்கி வளர்ப்பில் ஈடுபட்டால், 6 மாதம் வரை சிறை.

கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கிளி வளர்ப்பு மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், பச்சை கிளிகள் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1948-ன் படி, அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில், 4-வது இடத்தில் உள்ளது.

எனவே, பச்சை கிளிகளை வளர்ப்பதும் விற்பதும் குற்றம். ஆனால், சமீபகாலமாக ஆன்லைனிலும், நேரடியாகவும் கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கிளிகளை குஞ்சு பருவத்தில் இருந்தே வீட்டில் வளர்த்தால், பேசும் திறன் பெற்று அன்பாக பழகும். இதன் காரணமாகவே கிளிகளை வளர்க்க விரும்புகின்றனர். இதற்காக கிளிகளை பிடித்து, இறகுகளை வெட்டி, துன்புறுத்தி வீட்டில் வைத்து வளர்க்கின்றனர்.

இனப்பெருக்கம் செய்து ஒரு ஜோடி கிளி, 2 ஆயிரம் முதல், 5 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து, கோவை வனச்சரகர் அருண்குமார் கூறும்போது, கோவை மாவட்ட வன அலுவலகத்தில் பறவை மறு வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.


இங்கு, பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கப்பட்ட நிலையில் கிளிகள்  மீட்கப்பட்டு சுமார் 400-க்கும் மேற்பட்ட கிளிகள் பறவை மறு வாழ்வு மையத்தில் பராமரிக்கப்படுகின்றன.

இதில், 300-க்கும் மேற்பட்ட கிளிகள்  வீடுகளில் வாங்கி வளர்க்கப்பட்டவைதான். வளர்ப்பவர்களிடம் விசாரித்தால், இது குற்றம் என்பதே எங்களுக்கு தெரியாது என்கின்றனர். எனவே, இனிவரும் காலங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைனிலும், நேரடியாகவும் கிளிகள் வாங்கி வளர்ப்பில் ஈடுபட்டால், 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது என்றார்.

 

Tags :

Share via