ஜூலை  31-க்குள் +2 தேர்வு முடிவுகள் வெளியிட  உச்சநீதிமன்றம் உத்தரவு

by Editor / 24-06-2021 04:08:15pm
ஜூலை  31-க்குள் +2 தேர்வு முடிவுகள் வெளியிட  உச்சநீதிமன்றம் உத்தரவு


 

கொரோனோ பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கீடு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது எப்படி என்பது போன்ற வழிமுறைகளை வகுக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து, கடந்த 17ம் தேதி டில்லி உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ சார்பாக மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து விளக்கம் அளித்தது.
அதில், "மாணவர்கள் 11ம் வகுப்பில் பெற்ற சராசரி மதிப்பெண்ணைக் கொண்டு 30% வெயிட்டேஜ் முறையில் மார்க் அளிக்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு 40% வெயிட்டேஜ் மார்க் வழங்கப்படும். மேலும், எழுத்துத் தேர்வு மதிப்பீட்டில் மாணவர்கள் குறைந்தபட்சம் 32% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்று அறிவித்துள்ளது. பள்ளிகளின் கடந்தகால செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்படும். மேலும், பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு அடிப்படையில் 30% மதிப்பெண்கள் வழங்கலாம்" என கூறப்பட்டது.இதையடுத்து, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண் முறைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது. இன்று, 12ம் வகுப்புக்கான மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கான மதிப்பீடு முறையை 10 நாட்களுக்குள் அனைத்து மாநிலங்களும் இறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.அத்துடன், இறுதி செய்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் அந்தந்த மாநில அரசுகள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via