கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறந்த தரச் சான்று தகுதி

by Editor / 25-06-2021 10:01:59am
 கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறந்த தரச் சான்று தகுதி வைகோவின் சொந்த ஊர்கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறந்த தரச் சான்று தகுதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: "அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தேர்வு செய்து, மத்திய அரசின் நல்வாழ்வுத்துறை, தேசிய தரச் சான்றிதழ் (National Quality Assurance Standard) வழங்குகின்றது. தூய்மையான மருத்துவ வளாகம், மக்கள் பயன்பாடு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை உள்ளிட்ட காரணிகள், வரையறுக்கப்பட்ட தேசியத் தரத்திற்கு இணையாக இருக்கின்ற வகையில் தகுதி பெற்ற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, இந்தத் தரச் சான்று வழங்கப்படுகின்றது. நாடு முழுவதும் இதற்காக நேரடியாகக் கள ஆய்வு செய்கின்றார்கள். அவ்வாறு, கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய தகுதிச் சான்றிதழ் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இச்சான்றிதழ் பெற்ற, ஒரே அரசு மருத்துவமனை கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகும். இதனால், மேலும் சில வசதிகள் கிடைக்க இருக்கின்றன. வைகோ-வின் பெரு முயற்சியால் 3.4.1988 இல் தொடங்கப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தேவையான நிலத்தை, வைகோ-வின் குடும்பத்தினர் வழங்கினர். சுற்றுவட்டத்தில், பதினைந்து கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பயன் அளிக்கும் இதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும், வைகோ அடித்தளமாக இருந்து வருகின்றார். தரச் சான்றிதழ் பெற்றதைத் தொடர்ந்து, இம்மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் ஊழியர்களை அலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via