நம் மொழிகள் பாரம்பரியம் மிக்கவை- நம் வரலாற்றை பாதுகாக்க வேண்டும்-ஆளுநர் ஆர்.என்.ரவி.

by Editor / 11-12-2022 04:15:12pm
நம் மொழிகள் பாரம்பரியம் மிக்கவை- நம் வரலாற்றை பாதுகாக்க வேண்டும்-ஆளுநர் ஆர்.என்.ரவி.

இன்று மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று அவரது உருவப் படத்திற்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி , பாரதியார் குறித்து பேசிய மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது இளைஞர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

மேலும், ரத்தம் படிந்த கறையாலும், இராணுவ படைகளையும்  கொண்டுமே உருவாக்கப்பட்டது அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள். ஆனால் இந்தியா அப்படியானது அல்ல.இந்திய விடுதலைக்காக மட்டும் பாரதியார் போராடவில்லை, இந்தியாவிற்கான அவரது கனவை இளைஞர்களை காண வைத்தார், பெண் முன்னேற்றம் குறித்தும் பாடல்கள் எழுதி உள்ளார் என்றார்.


அதனால் தான் மத்திய அரசு இந்நாளை இந்திய தேசிய மொழிகள் நாளாக நாடு முழுவதும்  
கொண்டாடுகிறது. காசி தமிழ் சங்கமத்துக்கு சென்று வந்த மாணவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதை கேட்டபோது காசி தமிழ் சங்கமம் வெற்றிகரமான முயற்சி என்பது தெரிய வருகிறது என கூறினார்.

மேலும், நாட்டிற்காக போராடவும் உயிர் விடவும் வாய்ப்பும்,நிலையும் நமக்கு இல்லை ஆனால் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர் இழந்த வீரர்களின் கனவை நிறைவேற்றும் பெரிய பொறுப்பு உள்ளது. இந்தியா நூற்றாண்டை கொண்டாடும் போது உலக நாடுகளில் இந்தியா முதன்மையானதாக இருக்க வேண்டும் என கூறினார்.


அத்துடன், தோல்விகளால் துவண்டு விடாதீர்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நீங்கள்
செய்யும் அனைத்தும் இந்திய நாட்டை உயர்த்தும் என்று எண்ணம் கொள்ளுங்கள்.
உங்களுடைய வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி நீங்கள் வளரவில்லை என்றால் நாடும்
வளராது என மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆளுநர் அறிவுரை வழங்கினார்.

மேலும், பல ஆண்டுகளுக்கு முன் , ஏன் இன்றும் கூட ஆங்கில மொழி இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நம் மொழி குறித்து நமக்கு பெருமிதம் இருப்பது அவசியம். ஏனென்றால் நம் மொழிகள் பாரம்பரியம் மிக்கவை.


தமிழ்,சமஸ்கிருதம்,மலையாளம், கன்னடம், போன்ற மொழிகள் ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம் போன்ற மொழிகளை விட மிக பழமையானது.  தேசிய மொழிகள் தினத்தை இன்று கொண்டாடுவது தான் சரியானதாக இருக்கும்.  மொழி என்பது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுவது. நம் மொழி முதன்மையானது. அதை பேச எந்தவித தயக்கமும் தேவை இல்லை. இந்த நாட்டை மற்றவர்களை விட பிரதமர் மோடி அதிகம் புரிந்து வைத்துக் கொண்டுள்ளார் என்றார்.

மேலும், சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டை சிறந்த நாடாக மாற்றினார்கள், நாம் சண்டையிட்டு உயிரைவிட வேண்டிய தேவை இல்லை.நம் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். இது நம் கடமை என்றார்.

 

Tags :

Share via