சென்னை ஐ ஐ டி யில் ஜி20 மாநாடு கருத்தரங்கம் இன்று தொடக்கம்

by Editor / 31-01-2023 09:02:55am
சென்னை ஐ ஐ டி யில் ஜி20 மாநாடு கருத்தரங்கம் இன்று தொடக்கம்

உலகின் முன்னணி 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த மிக முக்கிய கூட்டமைப்பாக ஜி 20 கூட்டமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்த  நிலையில், ஜி 20 உறுப்பு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு கல்லூரி மாணவர்கள், ஐ ஐ டி மாணவர்கள், பேராசிரியர்கள் என 900 பேர் கலந்து கொள்ளும் வகையில் கல்விசார் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை ஐ ஐ டி ஆராய்ச்சி பூங்காவில் இன்று முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை மூன்று நாட்கள்
நடைபெற உள்ளது.

முதல் நாளான இன்று ஐ ஐ டி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் ” கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு ” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பள்ளிகல்வி மற்றும் கல்லூரி கல்வியில் ஒவ்வொரு நாடுகளின் பாடத்திட்டங்கள், செயல்பாடுகள், நடைமுறைகள் குறித்தும், திறன் மேம்பாடு குறித்தும் பேச உள்ளனர்.

காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வு மதியம் 3:30 மணி வரை நடைபெறும். இதனை தொடர்ந்து, ஐ ஐ டி வளாகத்தை ஜி 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சுற்றி பார்க்க உள்ளனர், பல்வேறு கலாச்சார கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும் கருத்துகள் குறித்து, பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறும் கல்வி மாநாட்டில் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via