போலீஸ் சீருடை அணிந்து காரில் புதுச்சேரி சாராயம் கடத்தி வந்த பெண் காவலர்

by Editor / 19-02-2023 12:17:58pm
 போலீஸ் சீருடை அணிந்து காரில் புதுச்சேரி சாராயம் கடத்தி வந்த பெண் காவலர்

நாகையில் போலீஸ் சீருடை அணிந்து காரில் புதுச்சேரி சாராயம் கடத்தி வந்த பெண் காவலர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் மடக்கி பிடித்து, ரூ. 5 லட்சம் மதிப்பிலான சாராயத்தை பறிமுதல் செய்தனர். கடத்தலை தடுக்க வேண்டிய போலீசாரே இச்சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. மேலும் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது. இதனை கண்காணித்து, தடுக்க மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காரைக்காலில் இருந்து காரில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நாகை நகர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக அக்கரைப்பேட்டை சுனாமி நினைவிடம் அருகே கார் ஒன்று நிற்பதை பார்த்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் போலீஸ் சீருடையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த காரில் சோதனை செய்தபோது, புதுச்சேரி மாநில சாராய மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது, நாகூர் அருகே கீழவாஞ்சூரை சேர்ந்த ரூபிணி(32) என்பதும், திருவாரூர் மாவட்டம் வைப்பூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் பெண் காவலரின் கணவர் ஜெகதீஷ்(34) என்பதும், மற்றொருவர் நாகை சேர்ந்த கோபிநாத்(38) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 336 மது பாட்டில்கள், 110 லிட்டர் சாராயத்தை காரில் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெண் போலீஸ் ரூபிணி, ஜெகதீஷ், கோபிநாத் ஆகிய 3 பேரையும் கையும், களவுமாகப் பிடித்த தனிப்படை போலீசார், மேலும் மதுபானம், சாராயத்தை வாங்க வந்த தெற்குபொய்கைநல்லுாரை சேர்ந்த ராஜசேகர்(24), மகாலிங்கம்(44) மகேஸ்வரி(34) ஆகிய 3 பேரையும் கைது செய்து, ரூ. 5 லட்சம் மதிப்பிலான சாராயம், மதுபானங்கள், கடத்த பயன்படுத்திய கார், பைக்குகளை நாகை நகர காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via