டோக்கியோ ஒலிம்பிக்: தமிழகத்தின் 5 தடகள போட்டியாளர்கள்

by Editor / 24-07-2021 06:34:37pm
டோக்கியோ ஒலிம்பிக்: தமிழகத்தின்  5 தடகள போட்டியாளர்கள்


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து தடகள போட்டியாளர்கள் 5 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் மதுரை, ராமநாதபுரம், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
ஆடவர் 4*400 மீட்டர் ஓட்டத்துக்காக ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டியும் கலப்பு 4*400 மீட்டர் ஓட்டத்துக்காக தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆரோக்கிய ராஜூவ் (30)


திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றாக வேண்டும் என்ற உறுதியில் மிகுந்த உத்வேகத்துடன் பயிற்சி பெறுகிறேன். ஒலிம்பிக் போட்டிக்கான ஆண்கள் தொடர் ஓட்டத்துக்கு சிறந்த அணி அமை்நதுள்ளது. எனவே இம்முறை பதக்கம் வெல்வதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

ஒலிம்பிக்கில் பெறும் வெற்றி மூலம் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன் என்றார்.
நாகநாதன் பாண்டி (25)ராமநாதபுரம் மாவட்டம் சிங்கப்புலியாபட்டியை சேர்ந்த நாகநாதன் பாண்டி, சென்னை தனி ஆயுதப்படை காவலராக உள்ளார. அவர் பஞ்சாபில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.


அகில இந்திய அளவிலான போட்டிகளில் காவல்துறை சார்பில் தங்கம் வென்றுள்ளார். அவர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கும் எனது கிராமத்துக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதே எனது லட்சியம் என்றார்.
தனலட்சுமி சேகர் (22)
திருச்சி மாவட்டம் கூடுரைச் சேர்ந்த தனலட்சுமி சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், கடந்த 4 ஆண்டுகாகத் தடகளத்தில் தீவிரப் பயிற்சி எடுத்து வருகிறார்.


ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு பயிற்சி செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலை இருந்தது.அவர் கூறுகையில் என்னை ஒலிம்பிக் வீராங்கனையாக்குவதில் எனது தாய் உறுதியாக இருந்தார். மணிகண்டன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் மற்றும் பலரது உதவியால் ஒலிம்பிக்கிற்கு தேர்வாகியுள்ளேன். நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நிச்சயம் பதக்கத்தை வெல்வேன் என நம்புகிறேன் என்றார்.


சுபா வெங்கடேஷ் (21)திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்த சுபா கூறுகையில், காவல்துறையில் பணியாற்றிய எனது தாத்தா சங்கிலிமுத்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஊக்கத்தை எனக்குள் விதைத்தார்.
சர்வதேச அளவிலான 8 போட்டிகளில் பங்கேற்று, அதில் 3 போட்டிகளில் பதக்கமும் வென்றுள்ள நிலையில் எனக்கு இதுவரை அரசுப் பணி கிடைக்கவில்லை.தகுதிக்கேற்ப அரசு வேலை இருந்தால், அதைப் பயன்படுத்தி மேன்மேலும் இத்துறையில் சிறந்து விளங்க முடியும். இந்த ஒலிம்பிக் போட்டியில் எனது முழுத் திறனையும் வெளிப்படுத்தி பதக்கம்வெல்ல முடியும் என நம்புகிறேன் என்றார்.


ரேவதி வீரமணி (23)
மதுரை மாவட்டம் சக்கி மங்கலத்தில் பிறந்த ரேவதி, கூடல்நகர் ரயில்வே சரக்கு நிலையத்தில் வணிக மற்றும் பயணச் சீட்டு எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். சிறுவயதில் தாய், தந்தையை இழந்தவரை பாட்டி வளர்க்க, பள்ளி காலத்திலேயே தடகள போட்டிகளில் பதக்கங்கள் வென்றார். பயிற்சியாளர் கண்ணன் வழிகாட்டுதலில் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றார்.


மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்து முடித்தவருக்கு கடந்த ஆண்டு ரயில்வே பணி கிடைத்தது. அவர் கூறுகையில் பஞ்சாபில் நடந்த தகுதித் தேர்வில் 400 மீட்டரை 53.55 நிமிடங்களில் நிறைவு செய்து ஒலிம்பிக் வாய்ப்பு பெற்றேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.

 

Tags :

Share via