கர்நாடகாவில் கட்சி செல்வாக்கைக் கடந்து ஆதிக்கம் செலுத்தும் சாதிகள்...

by Staff / 09-05-2023 05:02:06pm
 கர்நாடகாவில்  கட்சி செல்வாக்கைக் கடந்து ஆதிக்கம் செலுத்தும் சாதிகள்... கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், பல்வேறு சமூகத்தினரின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளன. எந்த சமூகத்தினர் எவ்வளவு அளவுக்கு உள்ளனர் என்பதை தெரிந்துகொள்வோம்.கர்நாடகத்தில் பொதுவான அரசியல் வாக்குறுதிகளை பிரதான கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் அளித்துள்ள நிலையில், உண்மையில் கள அளவில் சாதி என்ற அம்சம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அந்த மாநிலத்தில் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர்கள் சமூகத்தினரின் வாக்குகள்தான் வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது. கர்நாடக மக்கள் தொகையில் 17 விழுக்காடு மக்கள் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஒக்கலிகர்கள் 15 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 35 விழுக்காடு உள்ளனர்.எஸ்.சி,எஸ்டி சமூகத்தினர் 18 விழுக்காடும், இஸ்லாமியர்கள் 12.92 விழுக்காட்டினரும் உள்ளனர். மீதமுள்ளவர்கள் பிராமனர்கள் ஆவர். கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் எந்த சமூகத்தினர் எத்தனை எம்.எல்.ஏக்களை கொண்டிருந்தனர் என்ற விவரத்தை காணலாம்.கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் 224 தொகுதிகளில் லிங்காயத்து சமூகத்தினர் மட்டும் 67 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர். இதில் பாஜகவில் 40 பேர், காங்கிரஸில் 20 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினர்களாகினர்.இதேபோல் ஒக்கலிகர்கள் சமூகத்தினர் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினருக்குத்தான் அதிக எம்.எல்ஏக்கள் கிடைத்துள்ளனர். அந்த கட்சியில் மட்டும் 21 பேர் ஒக்கலிகர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாஜகவில் கடந்த முறை தேர்தலில் 14 பேரும், காங்கிரசில் 9 எம்.எல்ஏக்களும் ஒக்கலிகர்கள் ஆவர். இதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மக்கள் தொகையில் அதிகம் இருந்தாலும் கடந்த தேர்தலில் 24 எம்.எல்ஏக்கள் மட்டுமே தேர்வாகினர்.24 எம்எல்ஏக்களில் 18 பேர் பாஜக, காங்கிரஸில் 5, மதசார்பற்ற ஜனதாதளத்தில் ஒரு எம்எல்ஏ இதர பிற்படுத்தப்பட்டசமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இஸ்லாமியர்களின் வாக்குகளும் அந்த மதத்தினரின் எம்எல்ஏக்களின் வெற்றியை தீர்மானிக்கிறது.மொத்த 18 இஸ்லாமிய எம்எல்ஏக்கள் கடந்த முறை சட்டமன்றம் சென்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 11 எம்எல்ஏவும், பாஜகவில் 6, மதசார்பற்ற ஜனதாதளத்தில் ஒரு எம்எல்ஏவும் இஸ்லாமியராக தேர்வாகினர்.
 

Tags :

Share via