ஐஐடி மாணவர்கள் தற்கொலை: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

by Staff / 17-08-2023 02:49:17pm
ஐஐடி மாணவர்கள் தற்கொலை: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை, ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் சச்சின் குமார் கடந்த 31-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சைக்குஉள்ளானது. இதில், மாணவரின் வழிகாட்டிப் பேராசிரியருக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி, ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரிக்க குழு அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவைச் சென்னை ஐஐடி அமைத்தது. அந்தக் குழுவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி. சபிதா, ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கீத்து உள்ளிட்டோர் இடம் பெற்றனர். சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விசாரணைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிறுவன தலைமை அந்த அறிக்கையை மறு ஆய்வு செய்து, கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கும். நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர், பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்தப் பரிந்துரைகள் பொது வெளியில் பகிரங்கமாக வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via