பெண் விமானி.. ஜெயஸ்ரீயை கொண்டாடும் நீலகிரி மக்கள்..

by Editor / 10-09-2023 12:06:49pm
 பெண் விமானி.. ஜெயஸ்ரீயை கொண்டாடும் நீலகிரி மக்கள்..

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய நகரப் பகுதிகளிலும், அதையொட்டிய கிராமப் பகுதிகளிலும் படுகர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்,படுகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த சமூகத்தை சேர்ந்த பலர் கடந்த சில ஆண்டுகளாக மேற்படிப்பு முடித்து, மத்திய, மாநில அரசுகளில் முக்கியப் பதவிகளில் அங்கம் வகித்து வருகின்றனர்.அதேபோல கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளிலும் காலூன்றி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக நீலகிரியில் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள நெடுகுளா குருக்கத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணி – மீரா தம்பதியர்.மணி  கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் மீரா இசை ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.இவர்களது  மகள் ஜெயஸ்ரீ படுகர் சமுதாயத்தில் இருந்து முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார். கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஜெய ஸ்ரீ பள்ளி படிப்பை முடித்துள்ளார்.பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார்.இதையடுத்து சில ஆண்டுகள் ஐடி துறையில் வேலை பார்த்து வந்த இவர், விமானியாக ஆக வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.இதனைத்தொடர்ந்து விமானியாக வேண்டும் என்ற தனது ஆசையை ஜெய ஸ்ரீ பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் ஜெய ஸ்ரீ விமான பயிற்சி எடுத்துக் கொண்டார். பைலட் பயிற்சி முடித்து தற்போது ஜெய ஸ்ரீ விமானியாக சேர்ந்துள்ளார்.இதனால் ஜெய ஸ்ரீ படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

Tags :

Share via