லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கைது

by Staff / 16-09-2023 02:36:06pm
லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கைது

நாமக்கல் மாவட்டம், ஆலம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40). கடந்த 7-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நடந்து சென்று கொண்டிருந்த ஒரு 70 வயது மூதாட்டி மீது பிரகாஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த மூதாட்டியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிரகாஷ் சிகிச்சை அளித்து உள்ளார். சிகிச்சைக்கான செலவையும் பிரகாஷ் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.இருப்பினும் இந்த விபத்து குறித்து அறிந்த ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு எஸ். ஐ. செல்வகுமார், பிரகாஷின் இருசக்கர வாகனத்தை பறித்து வைத்துக் கொண்டார்.விபத்து ஏற்படுத்தியதாக பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்வதாகவும் கூறி மிரட்டியதாகத் தெரிகிறது. பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும், இருசக்கர வாகனத்தை திரும்ப ஒப்படைக் கவும் ரூ. 10, 000 லஞ்சம் வழங்குமாறு எஸ். எஸ். ஐ. செல்வராஜ் கேட்டுள்ளார்.
தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்றும், லஞ்சத்தொகையை குறைத்துக் கொள்ளு மாறும் எஸ். எஸ். ஐ. செல்வராஜிடம், பிரகாஷ் கூறியுள்ளார். ஒருகட்டத்தில் மொத்தம் 7, 000 ரூபாய் தருவதாகவும், இப்போதைக்கு தன்னிடம் ரூ. 2, 000 மட்டுமே உள்ளதாகவும், ரூ. 5 ஆயிரத்தை கொடுத்து விட்டு இரு சக்கர வாகனத்தை பெற்றுக் கொள்வதாகவும் கூறி விட்டு பிரகாஷ் சென்று விட்டார்.பேசியபடி லஞ்சம் தர விரும்பாத பிரகாஷ், ஈரோடு லஞ்ச ஒழிப்பு டி. எஸ். பி. ராஜேஷ் இடம் புகாரளித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய 5, 000 ரூபாய் நோட்டுகளை பிரகாஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர்.இன்று பகலில் ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பணியில் இருந்த செல்வராஜை சந்தித்த பிரகாஷ், ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வராஜை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து அவரிடமிருந்த லஞ்சப்பணத்தை கைப்பற்றி கைது செய்தனர்.

 

Tags :

Share via