பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: இபிஎஸ் கண்டனம்

by Staff / 02-11-2023 12:54:27pm
பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: இபிஎஸ் கண்டனம்

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது, நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது. இக்கொடூர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து, அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல். ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல், காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via