சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு; மதிப்பெண் திட்டம் வெளியீடு.

by Editor / 02-11-2023 10:28:53pm
சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு; மதிப்பெண் திட்டம் வெளியீடு.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் கோட்பாடு (Theory) மற்றும் செய்முறை (Practical) தேர்வுகளுக்கான மதிப்பெண் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பாடத்திற்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் 100 ஆகும், இது பாடம், செய்முறை, ப்ராஜெக்ட் மற்றும் உள் மதிப்பீட்டு (Theory, practical, project and internal) கூறுகளுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மதிப்பெண் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட சி.பி.எஸ்.இ வாரியம், "செய்முறை/ ப்ராஜெக்ட்/ உள் மதிப்பீட்டில் மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்யும் போது பள்ளிகள் தவறுகள் செய்வதை அவதானிக்க முடிந்தது. இந்த செய்முறை/ ப்ராஜெக்ட்/ உள் மதிப்பீடு மற்றும் கோட்பாட்டுத் தேர்வுகளை நடத்துவதற்கு பள்ளிகளுக்கு உதவுவதற்கு, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தகவலுக்காக சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.”

10ம் வகுப்புக்கு 83 பாடங்களுக்கும், 12ம் வகுப்புக்கு 121 பாடங்களுக்கும் மதிப்பெண் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இசை, ஓவியம், கணினி, சில்லறை வணிகம், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, நிதிச் சந்தை அறிமுகம், ஹெல்த்கேர், மல்டிமீடியா போன்ற 10 ஆம் வகுப்பு பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் 50.

ஆங்கிலம், இந்தி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான உள் மதிப்பீட்டு மதிப்பெண்கள் 20 ஆகும்.

12 ஆம் வகுப்பில், புவியியல், உளவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறை மதிப்பெண்கள் 30 ஆகும்.

ஓவியம், கிராபிக்ஸ், சிற்பம், வணிகக் கலை, நடனம், வீட்டு அறிவியல் போன்ற பாடங்களுக்கான செய்முறை மதிப்பெண்கள் 50 ஆகும்.

அனைத்து பாடங்களுக்கான மதிப்பெண் திட்டத்தின் முழுமையான பட்டியலைச் சரிபார்க்க, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சி.பி.எஸ்.இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மற்றும் வாரியத்தின் ஆண்டு தியரி தேர்வுகள் முறையே ஜனவரி 1, 2024 மற்றும் பிப்ரவரி 2, 2024 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via