தாமிரபரணி ஆற்று மணல் கடத்தல் வழக்கு:  சிபிசிஐடிக்கு மாற்றம்

by Editor / 30-07-2021 04:53:23pm
 தாமிரபரணி ஆற்று மணல் கடத்தல் வழக்கு:  சிபிசிஐடிக்கு மாற்றம்

 

நெல்லை  பேருந்து நிலையம் சீர்மிகு நகரம் கட்டுமானத்தின்போது சுமார் 100 கோடி ரூபாய் அளவில் தாமிரபரணி ஆற்று மணல் கடத்தப்பட்ட விவாகரத்தில் சிறப்புப் புலனாய்வு விசாரணை உத்தரவிடக் கோரிய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை: நெல்லையைச் சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவர் தாக்கல்செய்த பொதுநல மனுவில், "2018ஆம் ஆண்டு திருநெல்வேலி பேருந்து நிலையத்தை சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் கட்ட திட்டமிட்டு பணிகள் நடைபெற்றன.


அப்போது பேருந்து நிலையத்தில் அடித்தளம் அமைக்க சுமார் 30 அடி ஆழத்திற்குத் தோண்டப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு அருகே தாமிரபரணி ஆறு உள்ளதால், அப்பகுதி முழுவதும் மணல் நிறைந்த பகுதியாகும். பேருந்து நிலையத்திற்காகத் தோண்டப்பட்ட 30 அடி பள்ளத்தில் ஆற்று மணல் இருந்தது.


இது தொடர்பாக உயர் அலுவலர்களிடம் மனு அளித்த பின்பு, 30 அடி பள்ளத்திலிருந்து மணல் அள்ள ஏலம்விட அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் சில அரசியல் பிரமுகர்களின் உடந்தையோடு குறைந்த மதிப்பில் ஏலம்விட்டனர்
.சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் நெல்லை பேருந்து நிலையத்தில் அடித்தளம் அமைக்க 30 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டப்பட்டு மணல், களிமண்ணை சட்டவிரோதமாக நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.இதனால் அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து மணல் கடத்தலுக்குத் துணைபோன அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு விசாரித்துவந்தது. இந்த நிலையில் இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு தீர்ப்பை வாசித்தது.தீர்ப்பில், "திருநெல்வேலி பேருந்து நிலைய கட்டுமான பணியின்போது மணல் கொள்ளை நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்கு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தது.


மேலும், "இந்த வழக்கின் விசாரணை அலுவலராக காவல் துணைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ளவர் விசாரிக்க வேண்டும், விசாரணை அலுவலர் உடனடியாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும், சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவரை விசாரணைக்கு உதவியாக அழைத்துக்கொள்ளலாம்.


இங்கு உள்ள மணல்களை ஆய்வுக்கு எடுத்து அறிவியல் ரீதியாகச் சோதனை செய்து அறிக்கை கொடுக்க வேண்டும். இங்கு பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட மணல்களில் அரியவகை தாதுக்கள் உள்ளனவா என சோதனை செய்வதற்காகவும், உரிய விளக்கங்களைப் பெறுவதற்காகவும் அணுசக்தித் துறையின் உதவியைப் பெறலாம்" எனக் கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை நான்கு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via