திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு 5 நாள்கள் தடை

by Editor / 31-07-2021 12:03:29pm
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு 5 நாள்கள் தடை

 

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் 5 நாள்களுக்கு அனுமதியில்லை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் ஆகஸ்ட் 31ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், கரோனா பரவல் முன்னெச்சரிக்கை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை ஆடிக் கிருத்திகை என்பதால், அன்றைய தினம் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தருவார்கள் என்பதால், கரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, இன்று முதல் 5 நாள்களுக்கு திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


கோயிலில் நடைபெறும் அனைத்து பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அனைத்தையும் பக்தர்கள், கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக வீட்டிலிருந்தே பார்த்து மகிழலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via