குற்றாலம் சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி ஆனந்த பைரவி நாதஸ்வர இசையில் தாண்டவ தீபாராதனை. 

by Editor / 25-12-2023 11:35:53pm
குற்றாலம் சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி ஆனந்த பைரவி நாதஸ்வர இசையில் தாண்டவ தீபாராதனை. 

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள திருக் குற்றாலநாத சுவாமி திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற தலமாகும் இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி விசுத் திருவிழா, சித்திரை விசு, மார்கழி திருவாதிரை திருவிழாகள் வெகு விமர்சையாக பத்து நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 18ம் தேதி காலையில் குற்றாலநாத சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க மஞ்சள்,குங்குமம், பால்,தயிர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட 16வகை மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான இன்று 8ம் திருவிழாவை முன்னிட்டு பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் நடராச மூர்த்திக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு பச்சைமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தாண்டவ தீபாராதனை ஆனந்த பைரவி ராகத்தில் நாதஸ்வரம் இசைக்க நடைபெற்றது.

இவ்விழாவை காண தென்காசி மாவட்டத்தின் பலபகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சிகர நிகழ்ச்சியான வரும் 10ம் திருவிழாவான 27ம் தேதி குற்றாலநாதர் ஆலயத்தில் உள்ள திரிகூட மண்டபத்தில் அதிகாலை 4 மணிக்கு மேல் ஆருத்ரா விழா நடைபெறும் இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்துள்ளனர்.

 

Tags : குற்றாலம் சித்திர சபையில்

Share via