சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்.

by Editor / 26-12-2023 10:25:09am
சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் லட்சோப லட்ச பக்தர்கள்  கோயிலுக்கு வந்து, ஐயப்பனை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் கோயில் நடை திறக்கப்பட்டது.

இந்த நேரத்தில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பெருமளவில் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து சபரிமலைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் கடந்த வாரம் முதல் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்துவருகிறது.பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசிக்க சுமார் 5-12 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் முடித்துவருகின்றனர். அது தவிர சபரிமலை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவிவருகிறது.

பம்பைமுதல் சன்னிதானம் வரை  நீண்ட நேர வரிசையில் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்,அதிகாலைமுதல் கூட்டம் அதிகரித்துவருவதால் ஆங்காங்கே பக்தர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பாட்டு சன்னிதாளத்தில் கூட்டம் குறைந்தவுடன் அனுப்பிவைக்கும் பணியினை மேற்கொண்டுவருகின்றனர்.

அதிகாலை 3.30 மணி முதல் 7 மணி வரையிலும், காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும் நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. கோயில் நடை காலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 முதல் இரவு 11 மணி வரையிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 38 நாட்களில் இதுவரை 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 97 ஆயிரத்து 286 பேர் ஐயப்பனை வழிபட்டுள்ளனர்.

மண்டல பூஜையையொட்டிபுதன்கிழமை 70 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும்,ஜனவரி முதல் நாளொன்றுக்கு 80 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்யலாம் எனவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் பேருக்கு ஸ்பாட் புக்கிங் எனப்படும் உடனடி முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வருகிற 27ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும். மீண்டும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். பின்னர் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும்.

 

Tags : சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்.

Share via