ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்

by Editor / 22-08-2021 05:09:50pm
ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்

தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் வேலூரில் 21வது ஆண்டாக ஆவணி அவிட்டம் விழா பூணுால் மாற்றும் விழா நடந்தது.ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திர தினத்தன்று பூணல் அணிபவர்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பக்திபூர்வமான பண்டிகை இது. இந்த நாளில் பூணுால் அணிபவர்கள் தங்கள் அணிந்துள்ள பழைய பூணுால் மாற்றும் விதமாக புதிய பூணுால் காயத்திரி மந்திரம் உச்சரித்து அணிந்து கொண்டு பின் பழைய பூணுாலை கழற்றிவிடுவர். வேதம் பயின்றவர்கள் தங்களது வேத மந்திரங்களை புதுப்பிக்கவும், துவக்கவும் துவங்கும் நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது.இப்படிப்பட்ட இவ்விழா ஆவணி அவிட்டம் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில், வேலூர் மாநகரம், பேரிப்பேட்டை, காந்திரோடு அடுத்த கே.வி.எஸ் செட்டித்தெருவில் அமைந்துள்ள வீரபிரம்மங்கார் மடத்தில் 21வது ஆண்டாக ஆவணி அவிட்டம் என்னும் பூணுால் மாற்றும் விழா இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.விழாவிற்கு தலைவர் தேஜோமூர்த்தி தலைமை தாங்கினார். நிறுவனர் மற்றும் செயலாளர் ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராசன், அமைப்புச்செயலாளர் குப்புசாமி ஆச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை நிலைய செயலாளர் சோமாஸ்கந்தன், துணைத்தலைவர்கள் பன்னீர்செல்வம், அண்ணாமலை, ஞானசம்பந்தன், இணை செயலாளர்கள் செல்வராஜ், நாகராசன், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கணபதி ஹோமம் செய்த பின்னர் காயத்திரி மந்திரம் உச்சரித்து பூணுால் மாற்றிக்கொண்டனர். இந்நிகழ்வில் வேலூர் மாநகரத்தில் உள்ள விஸ்வகர்ம நண்பர்கள் 200 பேர் பங்கேற்று பூணுால் மாற்றிக்கொண்டனர்.

 

Tags :

Share via